திருநெல்வேலி அருகேயுள்ள மானூரில் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட 123 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் மானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளமடை, மானூர், குப்பனாபுரம், பல்லிக்கோட்டை, தென்கலம், தென்கலம்புதூர், நல்லம்மாள்புரம், புளியங்கொட்டாரம், நெல்லைத் திருத்து, கட்டப்புளி, நாஞ்சான்குளம், மதவக்குறிச்சி ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் உள்ளன. இந்த நிலத்துக்கு நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் தீர்மானித்த பசலி தீர்வையைச் செலுத்தியும், கோயில் நிர்வாக அனுமதி பெற்றும் விவசாயிகள் பயிர் செய்து வருகிறார்கள். நிலத்தைச் சீர்செய்தல், கிணறுவெட்டுதல், மின்இணைப்புப் பெறுதல் போன்றவற்றுக்கு தனியாக செலவு செய்துள்ளனர்.
இந்த நிலங்களை, தமிழ்நாடு காதித ஆலை நிறுவனத்துக்கு குத்தகைக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மானூர் வட்டார பகுதி விவசாயிகள் சங்கரன்கோவில்-திருநெல்வேலி பிரதான சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் ப.ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ம.யோக்கோபு, மாவட்ட நிர்வாகிகள் வண்ணை முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த மறியலால் சங்கரன்கோவில்-திருநெல்வேலி பிரதான சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 123 பேரை மானூர் போலீஸார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.