அனைவருக்கும் சட்ட உதவி கிடைக்கவே சட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது: நீதிபதி பத்மா தகவல்

விருதுநகர் சட்டப்பணிகள் குழு, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோட்டையூர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெண்கள் மற்றும் குழந்தைகள் கிராமப்புற முன்னேற்ற திட்டமும் இணைந்து
Updated on
1 min read

அனைவருக்கும் சட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என்பற்காக நீதிமன்ற வளாகத்தில் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக நீதிபதி பத்மா தெரிவித்தார்.

விருதுநகர் சட்டப்பணிகள் குழு, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோட்டையூர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெண்கள் மற்றும் குழந்தைகள் கிராமப்புற முன்னேற்ற திட்டமும் இணைந்து நடத்திய இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.

இக்கல்லூரி வளாகத்தில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு உபதலைவர் என்.தனபால் தலைமை வகித்தார். மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் அழகுசுந்தரம், மூத்த வழக்குரைஞர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.இ.பத்மா பங்கேற்று பேசுகையில், அனைவருக்கும் சட்ட உதவிகள் கிடைக்க வேண்டும். இதற்காக தாலுகா தலைமையிடத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஜீவானம்சம் பெறவும், வரதட்சணை கொடுமை, சொத்து பிரச்னை ஆகியவைகளிலிருந்து இம்மையம் மூலம் உரிய நீதி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஏழைகளுக்கு இலவசமாக வாதிடுவதற்கு வழக்குரைஞர்களும் ஏற்பாடு செய்வதோடு, அக்கட்டணத்தை நீதிமன்றமே செலுத்தி விடும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த முகாமில் நீதித்துறை நடுவர் எ.பாலகிருஷ்ணன் பேசும் பொழுது, குற்றங்கள் செய்து விட்டு சட்டங்கள் தெரியாது என யாரும் சொல்ல முடியாது. தற்போதைய காலகட்டங்களில் கணிப்பொறி, கைப்பேசி ஆகியவைகளின் மூலம் குற்றங்கள் என்பது அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் குறிப்பிட்டு பேசினார்.

இதில், விருதுநகர் துணைக்காவல் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, வழக்குரைஞர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதற்கான ஏற்பாடுகளை வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஆர்.ரமேஷ்குமார், சட்டப்பணிகள் குழு அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com