மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் துறையின் ஆய்வக ஸ்டோரில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது வேதியியல் துறை. இதன் தரைத்தளத்தில் முதுகலை (எம்.எஸ்.சி.) மாணவர்களுக்கான ஆய்வகம் உள்ளது. ஆய்வகத்துக்குத் தேவையான வேதியியல் உப்புகள், அமிலங்கள் உள்ளிட்டவை சேமித்து வைக்கும் ஸ்டோரும் அருகே உள்ளது. வியாழக்கிழமை காலையில் திடீரென ஆய்வக ஸ்டோரிலிருந்து புகை வந்துள்ளது. பின்னர் தீ பற்றி எரிந்துள்ளது. மேலும், ஆய்வக ஸ்டோரிலிருந்த அமில பாட்டில்களும் வெடித்துச் சிதறியுள்ளன.
தகவலறிந்ததும் மதுரை பெரியார் பஸ் நிலையம், தல்லாகுளம், சோழவந்தான், திருமங்கலம் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்தன. நுரை பீய்ச்சியடிக்கும் தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயை முற்றிலுமாக தீணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
மதுரை மாவட்ட தீயணைப்பு அதிகாரி பி.சரவணக்குமார் முன்னிலையில் தீ அணைக்கும் பணி நடந்தது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், வேதியியல் பொருள்களால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். ஸ்டோரிலிருந்த அனைத்துப் பொருள்களும் சேதமடைந்துள்ளன. சேதமதிப்பு பல லட்ச ரூபாயாக இருக்கும் என்றார்.
தீ விபத்துக்குள்ளான ஸ்டோரிலிருந்த மேஜை நாற்காலிகள், கணினிகள், விலை உயர்ந்த வேதியல் உப்புகள், அமிலங்கள் என அனைத்தும் எரிந்துள்ளன. மேலும் தீ பற்றிய அறையின் அருகேயிருந்த அறைகளும், முதல் மேல் தள அறையிலும் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு அலுவலர்கள் கூறினர்.
தீ விபத்துகுறித்து நாகமலைப்புதுக்கோட்டை போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.