ரூ.1.25 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட சிதம்பரம் ஸ்ரீநடராஜர் புதிய தேர் வெள்ளோட்ட பவனி!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பச்சையப்பன் அறக்கட்டளையினரால் ரூ.1.25 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள ஸ்ரீநடராஜப்பெருமான் புதிய தேர் வெள்ளோட்ட பவனி வியாழக்கிழமை


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பச்சையப்பன் அறக்கட்டளையினரால் ரூ.1.25 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள ஸ்ரீநடராஜப்பெருமான் புதிய தேர் வெள்ளோட்ட பவனி வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு, 375 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளல் பச்சையப்ப முதலியாரால் தேர்கள் காணிக்கையாக வழங்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. வருடங்களுக்கு முன்பு பச்சையப்ப முதலியாரே நேரடியாக களம் இறங்கி தேர்களை புணரமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள 5 தேர்களில் ஸ்ரீநடராஜர் தேர் மற்றும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் தேர்கள் பழுதுற்றது. இதனால் கடந்த ஆண்டு 2013 டிசம்பர் மாதம் நடைபெற்ற மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவின் போது தேர்கள் வீதிகளில் நிற்காமல் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து தேர்களை சீரமைப்பது குறித்து பச்சையப்பன் அறக்கட்டளை தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் தேர்களை பார்வையிட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
இதனையடுத்து கோயில் பொதுதீட்சிதர்களின் முயற்சியால் காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து சிற்பிகளை வரவழைக்கப்பட்டு இரவு பகலாக பணியாற்றி ரூ.55 லட்சம் செலவில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் தேர் சீரமைத்து கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆனித்திருமஞ்சன தேர் திருவிழாவின் போது ஸ்ரீசிவகாமிசுந்தரி அம்மன் புதிய தேர் பொது தீட்சிதர்களால் வெள்ளோட்டம் விடப்பட்டது. ஸ்ரீநடராஜப் பெருமான் தேர் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு ஆனித்திருமஞ்சன திருவிழாவின் போது இயக்கப்பட்டது.
பின்னர் ஸ்ரீநடராஜப் பெருமான் தேரை மார்கழி ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பு ரூ 1.25 கோடி செலவில் சீரமைத்து கட்டுமானப் பணிகளை முடிப்பது என முடிவெடுக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்றது. இதனையடுத்து ஸ்ரீநடராஜப் பெருமான் தேர் முற்றிலுமாக பிரித்தெடுக்கப்பட்டு, திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி சிவனேசன் தலைமையில் ஊழியர்கள் தேர் கட்டுமானப்பணியில் ஈடுபட்டனர். 21 அடி உயரம், 21 அடி அகலத்தில் தேர் முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு பணி முடிவுற்றது.
வருகிற ஜன.4-ம் தேதி நடைபெறவுள்ள மார்கழி ஆருத்ரா தரிசன உத்சவ தேர்த்திருவிழா, ஜன.5-ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு டிச.25-ம் தேதி வியாழக்கிழமை ஸ்ரீநடராஜப்பெருமான் புதிய தேர் வெள்ளோட்ட பவனி நடைபெற்றது. வியாழக்கிழமை காலை பொதுதீட்சிதர்களால் புதிய தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொதுதீட்சிதர்களில் செயலாளர் ரா.பாஸ்கரதீட்சிதர், உத்சவ ஆச்சாரியார் நடராஜ சுப்பிரமணிய தீட்சிதர், பச்சையப்பன் அறக்கட்டளை நிதிக்குழுத் தலைவர் ஆர்.பிரதாப்குமார், செயலாளர் ராஜகோபால், நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், செயலாளர் சந்திரசேகரன், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.என்.சிங்காரவேலு, மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் கீழசன்னதி எதிரே உள்ள தேரடி நிலையிலிருந்து ஸ்ரீநடராஜப்பெருமான் புதிய தேர் புறப்பட்டு, கீழரதவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி வழியாக கீழவீதி தேரடி நிலையை அடைந்தது. திரளான மக்கள் பங்கேற்று வடம் படித்து தேரை இழுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...