ராஜாபளையம் வட்டார பகுதியில் ஒரே வாரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 9 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை பகுதிகளில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ராஜபாளையத்தில் கடந்த 4 நாள்களுக்குள் 7 குழந்தைகளும், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா ஒரு குழந்தையும் உயிரிழந்துள்ளனர். ராஜபாளையம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் போதிய வடிகால் வசதிகள் இல்லாமல் கழிவு நீர்தேங்குவதும், குப்பைகள் தேங்கி கிடைப்பதே நோய் பரவுவதற்கு காரணமாகும். இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வீடுகளுக்குள் புகுந்து அனைவரையும் கடிக்கின்றன.மாவட்ட நிர்வாகமும் குறிப்பிட்ட நேரத்தில் கொசு தடுப்பு நடவடிக்கை எடுக்காத காரணங்களால் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இக்குடுபங்களைச் சேர்ந்தோருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதிக பாதிப்புள்ளான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் பேரூராட்சி மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதார தடுப்பு முகாம்களையும் நடத்தி கட்டுப்படுத்த வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.