

விருதுநகர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் செவ்வாய்கிழமை அதிகாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கைக்குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 5 பேர்கள் வரையில் படுகாயம் அடைந்தனர். இதில் வழிபாடு முடித்துக் கொண்டு ஊருக்கு திரும்பும் போது விபத்துச் சம்பவம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் சரவணன்(45). இவரது சகோதரர் பொன்ராஜ்(40). இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் காரில் திருநள்ளாறுக்கு வழிபாடு நடத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றார்களாம். அந்தக் காரில் பொன்ராஜ் மனைவி பிரியா(32), மகள் முத்து சவுமியா(6), 3 மாத கைக்குழந்தை பாலவிசாலி, சரவணன் மனைவி லட்சுமி(36), மகன்கள் முத்துக்குமரன்(17), பிருத்திவி தங்கம்(10) ஆகியோர் சென்றுள்ளனர். இக்காரை சரவணன் ஓட்டினாராம்.
இந்நிலையில் திருநள்ளாரில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு கோவில்பட்டிக்கு இரவில் திரும்பினர். அப்போது, விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையில் ஆர்.ஆர்.நகர் அருகே அதிகாலையில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பயணம் செய்தவர்கள் கார் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ளவர்கள் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பொன்ராஜும், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது கைக்குழந்தை பாலவிசாலியும், அவரது மனைவி பிரியா மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் இடையிலேயே உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் சரவணன், அவரது மனைவி லட்சுமி, மகன்கள் முத்துக்குமரன், பிருத்திவிதங்கம், பொன்ராஜின் மகள் முத்துசவுமியா ஆகியோரை படுகாயம் அடைந்த நிலையில் மீட்டு மதுரை தனியார் மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.