விருதுநகரில் இருந்து திண்டுக்கல்லுக்கு புதிய மின்மயமாக்கப்பட்ட பாதையில் மின்சார இன்ஜின் பொறுத்தப்பட்ட சிறப்பு ஆய்வு ரயில் மூலம் ரயில்வே பாதுகாப்பு துறை ஆணையாளர் தலைமையில் தொழில் நுட்ப அலுவலர்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகருக்கும்-திண்டுக்கல்லுக்கும் இடையே 105 கி.மீ தூரம் உள்ளது. இந்த வழித்தடத்தில் மின்பாதை அமைக்கும் பணி 2010ல் தொடங்கி, 2013ல் முடிவடைந்தது. இப்பாதையில் தென்னக ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையாளர் சதீஸ்குமார் மித்தல் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்.20ம் தேதி ஆய்வு மேற்கொண்ட பின் சோதனையோட்டம் நடத்தப்பட்டது. அதில், மி்ன்சார ரயில் இன்ஜின் பொறுத்தப்பட்டு ஆய்வு செய்ததில் சில கோளாறுகள் இருப்பதை கண்டறிந்தனர். அதை சரி செய்வதற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவிட்டார்.
அதை சரி செய்த பின் கடந்த டிச.18-ம் தேதி விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு புதிய மின்பாதையில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்குகிறது. இப்பாதையில் மின்சார இன்ஜினுடன் 3700 டன் சரக்குகள் ஏற்றப்பட்ட பெட்டிகளில் 80 கீ.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் இயக்கி ஆய்வு செய்யப்பட்டது. தற்போது, திண்டுக்கல்லில் இருந்து விருதுநகர் ரயில் நிலையத்திற்கு டீசல் இன்ஜினில் இணைத்து இழுத்துவரப்பட்ட மின்சார இன்ஜின் புதன்கிழமை மாலை 3.15 மணிக்கு வந்தது. பின்னர் அதில் 6 பெட்டிகள் அடங்கிய சிறப்பு ஆய்வு ரயிலில் இணைத்து 3.20 புறப்பட்டுச் சென்றது.
இந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு துறை ஆணையாளர் சதீஸ்குமார் மித்தல், கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் அஜித்குமார், ரயில் இயக்க மேலாளர் எஸ்.டி.ராமலிங்கம் உள்ளிட்ட தொழில் நுட்ப அலுவலர்கள் அடங்கிய குழுவினர் மின் வழிப்பாதை இணைப்பு சரிசமமாக உள்ளதா, இடையில் மின்தடை ஏற்படுகிறதா என்பது குறித்து மின் கருவி மூலம் திண்டுக்கல் வரையில் சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.
இந்த ஆய்வு ரயில்வே பாதுகாப்பு ஆணையாளருக்கு திருப்தி அளிப்பதாக சான்றளி்க்க வேண்டும். அதன் பின்னரே பயணிகள் ரயில் இயக்குவதா அல்லது சரக்கு ரயில் இயக்குவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.