

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசித்திருவிழா ஏழாம் நாளன்று காலையில் சண்முகர் ஏற்ற தரிசனம் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த 6-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் காலை,மாலை வேளைகளில் சுவாமி அம்மன் தனித்தனி வாகனங்களில்
எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். புதன்கிழமை ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு சண்முகவிலாச மண்டபத்தில் வைத்து சுவாமி ஆறுமுகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனையாகி, சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார்.ஏழாம் திருவிழாவன்று காலையில் சுவாமி ஏற்ற தரிசனம் காண இராஜபாளையம், தென்காசி, வாசுதேவநல்லூர், திருநெல்வேலி, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்த வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவிலில் அதிகாலை முதலே குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் காவல்துறை மற்றும் திருக்கோவில் தனியார் செக்யூரிட்டிகள் திணறினர். பக்தர்கள் வந்த வாகனங்களால் நாழிக்கிணறு பேருந்து நிலையம் நிரம்பி வழிந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டைமணிகண்டன், இணை ஆணையர் (பொ) இரா.ஞானசேகர், அலுவலக கண்காணிப்பாளர் பாலு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.