கிராம அஞ்சல் நிலையங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் புதன்கிழமை தபால் பட்டுவாடா செய்யும் பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.
அகிலந்திய அளவில் கிராம அஞ்சலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஊதியத்தை உயர்த்தி வழங்கவும், அதை 1.1.2014 முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 4 தலைமை அஞ்சல் நிலையம், 80 அஞ்சல் நிலையங்கள் மற்றும் 78 கிளை அஞ்சல் நிலையங்களில் தபால் பட்டுவாடா பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியது. இங்கு நாள்தோறும் அரசு துறைகளின் தபால்கள் அனுப்புதல், பதிவு மற்றும் விரைவு அஞ்சல், பணம் அனுப்புவது, கிராம காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகை வசூல் செய்தல், அஞ்சலக சேமிப்பு வசூல், முதியோர்களுக்கு ஓய்வூதியம் பட்டுவாடா விநியோகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய அஞ்சல் துறை ஊழியர்கள் சங்கத்தின் கோட்ட செயலாளர் மாரீஸ்வரன் கூறுகையில், குறிப்பிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில், அஞ்சல் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என ஆண்கள் 783 பேரும், 100 பெண்களும் உள்ளனர். இதில், 725 ஆண்களும், 92 பெண்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அஞ்சல் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் தபால் பட்டு வாடா பணிகள் அனைத்தும் பாதித்துள்ளது. அதோடு, அஞ்சல் காப்பீட்டு சேமிப்பு கணக்குகள் மூலம் நாள்தோறும் ரூ.5 கோடி வரையிலும், கிராம காப்பீட்டு திட்டம் மூலம் ரூ.2.50 கோடி வரையிலும் பண பரிவர்த்தனையும், வசூல் செய்யும் பணியும் நடைபெறவில்லை. கிராமங்களில் முதியோர்களுக்கு ஓய்வூதியம் தொகை வழங்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.