நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் சாவு: ஊழியர்கள் வேலை நிறுத்தம், சாலை மறியல்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள ஆவராணி புதுச்சேரி நேரடி நெல் கொள்முதல் நிலைய பருவகால பட்டியல் எழுத்தர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இவரது மரணத்துக்குத்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள ஆவராணி புதுச்சேரி நேரடி நெல் கொள்முதல் நிலைய பருவகால பட்டியல் எழுத்தர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இவரது மரணத்துக்குத் தரக்கட்டுப்பாட்டுக் குழுவினர் அளித்த மன உளைச்சளே காரணம் எனக் கூறி, கொள்முதல் ஊழியர்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தம் மேற்கொண்டு, நாகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் சுரேஷ்குமார்(32). இவர், கீழ்வேளூரை அடுத்த ஆவராணி புதுச்சேரியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பருவகால பட்டியல் எழுத்தராகப் பணியாற்றி வந்தார்.

ஆவராணி புதுச்சேரியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நுகர்பொருள் வாணிபக் கழக தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜமூர்த்தி தலைமையிலான பறக்கும் படை குழுவினர் புதன்கிழமை மாலை திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 3 மணி நேரம் நீடித்ததாகக் கூறப்படும் இந்தச் சோதனையின் போது, அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கணக்கில் வராத 7 நெல் மூட்டைகளும், கூடுதல் எண்ணிக்கையிலான  காலி சாக்குகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பான மேல் நடவடிக்கைகள் குறித்து அச்சமடைந்திருந்த சுரேஷ்குமார் பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே தங்கியிருந்த அவர், புதன்கிழமை இரவு திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார்.  இருப்பினும், அவரது மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

இது குறித்துத் தகவலறிந்த கீழ்வேளூர் போலீஸார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த நிலையில், தரக்கட்டுப்பாடு பறக்கும் படை குழுவினர் அளித்த மன உளைச்சலே சுரேஷ்குமாரின் மரணத்துக்குக் காரணம் எனக் கூறி, ஆவராணி புதுச்சேரி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பறக்கும் படை குழுவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி  நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தம் மேற்கொண்டு,  நாகைப் புதியப் பேருந்து நிலையம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 400-க்கும் மேற்பட்டோர் இந்த சாலை மறியலில் ஈடுபட்டதால்,  நாகை அரசு மருத்துவமனை வழியேயான சாலைப் போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி மறியல் நடைபெற்ற இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுட்ட நெல் கொள்முதல் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com