இளம் பெண்ணை கொன்று புதைத்த காதலன் உள்பட 5 இளைஞர்கள் கைது

நாகை அருகே இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தொடர்பாக அந்தப் பெண்ணின் காதலன் உள்பட 5 இளைஞர்களை வேளாங்கண்ணி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது

நாகை அருகே இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தொடர்பாக அந்தப் பெண்ணின் காதலன் உள்பட 5 இளைஞர்களை வேளாங்கண்ணி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

நாகை அருகே உள்ள வடக்குப் பொய்கைநல்லூர், காரைக்குளம் பகுதியில் கடற்கரையோரத்தில் உள்ள தனியார் தோட்டத்தின் ஒரு பகுதியில் இளைஞர்கள் சிலர் திடீரென மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பூஜை நடத்தியதும், அங்கு ஒரு சடலம் புதைக்கப்பட்டிருந்ததும் வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

அந்த இடத்திலிருந்த சடலம் சனிக்கிழமை தோண்டியெடுக்கப்பட்ட போது,  அந்தச் சடலம்,  கடந்த 30-ம் தேதி வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்வதாகக் கூறிச் சென்று காணமால் போன நாகை, அக்கரைப்பேட்டை, திடீர்குப்பத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணின் சடலம் என்பவது அவரது தாய் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், அக்கரைப்பேட்டை, திடீர் குப்பத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ஞானவேல்(23), அவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த க. தீபன்ராஜ்(23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் மற்றும் 2 சிறார்கள் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து, கடந்த 31-ம் தேதி அதிகாலை அந்தப் பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொலை செய்து, காரைக்குளம் மணல் திட்டில் புதைத்தது தெரியவந்தது.

கொலைக்கான காரணம்:

ஞானவேலுவும், கொலையான பெண்ணும் காதலித்து வந்ததில், அந்தப் பெண்  கர்ப்பமானார். இது குறித்த தகவல் வெளியானதால், ஞானவேலுவின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணின் நடத்தையை விமர்சித்துப் பேசியுள்ளனர். இந்த நிலையில், அந்தப் பெண்ணும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஞானவேலுவை வற்புறுத்தியுள்ளார்.இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடிவெடுத்த ஞானவேலு, தனது காதலியைக் கொலை செய்யத் திட்டமிட்டு, தனது நண்பர்களுடன் கொலை திட்டத்தை நிறைவேற்றியுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து வேளாங்கண்ணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரா. ஞானவேல், க. தீபன்ராஜ் ஆகியோரை வேதாரண்யம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு இளைஞரை தஞ்சாவூரில் உள்ள இளைஞர் நீதிக் குழுமத்திலும், 17 வயதுக்குள்பட்ட 2 பேரை நாகையில் உள்ள சிறார் சீர்திருத்தக் குழுமத்திலும் போலீஸார் திங்கள்கிழமை முன்னிலைப்படுத்தி, சீர்திருத்தப் பள்ளிகளில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com