ஸ்ரீவில்லிபுத்தூரில் தம்பதி கொலை: துப்புக் கிடைக்காமல் போலீஸார் திணறல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தம்பதியினர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இன்றி போலீஸார் திணறி வருகிறார்கள்.
Published on
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தம்பதியினர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இன்றி போலீஸார் திணறி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், சௌண்டியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆர்.சோலைமலை (52). இவர் கிருஷ்ணபேரி காமாக் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சரோஜா (59), ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு குழந்தை கிடையாது.

சரோஜாவின் உடன் பிறந்த தங்கை தமிழ்செல்வி (45). இவர் சாத்தூர், பாரதி நகர், 5-வது தெருவில் குடியிருந்து வருகிறார். தமிழ்செல்வி சின்னக்காமன்பட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 16-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மதியத்திலிருந்து தனது சகோதரிக்கு செல்போனில் தொடர்பு கொண்டிருந்துள்ளார். ஆனால் மணி அடித்தும் அவர்கள் எடுக்கவில்லை. தொடர்ந்து மறுநாளும் இதே நிலை நீடித்ததால், 17-ம் தேதி மாலை 4 மணியளவில் நேரடியாக சகோதரியின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் வெளியே இருந்து செல்போனில் தொடர்பு கொண்டபோதும், வீட்டினுள் செல்போன் மணி அடித்துள்ளது. ஆனால் போனை யாரும் எடுக்கவில்லையாம். இதனையடுத்து வீட்டை உடைத்துச் சென்று உள்ளே பார்த்த போது, சோலைமலை கழுத்தில் பல இடங்களில் வெட்டுக் காயத்துடனும், கிரைண்டர் குழவியை தலையில் போட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். சரோஜாவும், குழவிக் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

16-ம் தேதி காலை 10.50 மணி வரை இவர்கள் செல்போனில் பேசியுள்ளார்கள். வீட்டிலுள்ள நாய்க்கு வாங்கி வைத்திருந்த எலும்பு, கறி உள்ளிட்டவை சமையல் அறையில் அப்படியே இருந்துள்ளது. சரோஜா அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த சுமார் 40 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சம் உள்ளிட்டவை திருடு போகாமல் இருந்துள்ளது.

இது குறித்து தமிழ்செல்வி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், சோலைமலைக்கு பல லட்சம் மதிப்புள்ள சொத்து உள்ளதாயும், பாகப்பிரிவினை தொடர்பாக முன்பகை இருந்ததாயும் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து துப்பு துலக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன், குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்பத்தார், அருகில் உள்ளவர்கள், கூலிப்படை என பல்வேறு தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் காணப்படாமல் போலீஸார் திணறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com