விருதுநகர் அருகே பைக்கில் சென்ற ரியல் எஸ்டேட் அதிபரை வாகனம் மூலம் மோதி கொலை செய்தது தொடர்பாக 3 பேரை சூலக்கரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் ஐ.சி.யு காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(58). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 30.11.2013-ம் தேதி விருதுநகர் இருந்து சொந்தக் கிராமமான அழகாபுரிக்கு அதிகாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் விபத்து நடந்த சாலையோரத்தில் நம்பர் பிளேட்டின் சிறு துண்டு கிடந்துள்ளது. அதைக் கைப்பற்றி தீவிரமாக விசாரித்தனர். அந்த வாகனம் பெரியவள்ளிக்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தைச் சேர்ந்தவரான ராமனுஜம்(58) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.பின்னர் அவரை பிடித்து போலீஸார் விசாரணையில், இவரும்-ஜெகதீசனும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் அழகாபுரி அருகே இருக்கும் 40 லட்சம் மதிப்பிலான சொத்து தொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாம். இதையடுத்து, கொலை செய்வதற்கு திட்டமிட்டார்களாம். அதன் அடிப்படையில் கடந்த நவ-27ம் தேதி அன்று பழைய வாகனத்தை வாங்கியுள்ளனர். அந்த வாகனத்தை வைத்துதான் 30ம் தேதி காலையில் பைக் மீது மோதி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
உடனே இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வாகனம் மற்றும் பெரியவள்ளிக்குளத்தைச் சேர்ந்த ராமனுஜம், சகோதர்களான பன்னிர்செல்வம், சின்னலக்கன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.