

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காவல் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்த பெண் காவலரிடம் விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாக குழுவினர் செவ்வாய்கிழமை விசாரணை செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே நார்த்தம்பட்டியைச் சேர்ந்தவர் கீதா(35). தற்போது, கொடைக்கானல் வட்டார காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டை வட்டார காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றினார். அப்போது, இதே நிலையத்தில் காவல் ஆய்வாளராக ஆவுடையப்பன் என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் அடிக்கடி கீதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம். இனங்க மறுத்ததால் இரவும், பகலும் மாறிமாறி பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டராம். இது தொடர்பாக அப்போதைய மாவட்ட காவல் துறை நிர்வாகத்திடம் காவல் ஆய்வாளர் குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால், உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மேலூர் வட்டார காவல் நிலையத்தில் ஆவுடையப்பன் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஜன.2ம் தேதி பாலியல் தொந்தரவு செய்ததாக மதுரை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தாராம். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேசன் சம்பவம் நடந்த மாவட்ட காவல் துறைக்கு விசாகக் குழு மூலம் விசாரித்து அறிக்கையை அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சூலக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய வளாக அறையில் விசாகக் குழுவைச் சேர்ந்த உதவி காவல் கண்காணிப்பாளர் சியமளாதேவி, காவல் ஆய்வாளர் விஜயா, விருட்சம் மகளிர் முன்னேற்ற களஞ்சிய அமைப்பின் செயலாளர் கே.விஜயா, மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சங்கரேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேர்முக உதவியாளர் பத்மாவதி உள்ளிட்டோர் பூட்டிய அறையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனுவின் அடிப்படையில் விசாரித்தனர்.
அதையடுத்து, காவல் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு செய்தது உண்மைதானா எனவும், சம்பவம் நடந்த இடம் தொடர்பான தலைமைக் காவலர் கீதா கூற, வாக்கு மூலத்தை குழுவில் உள்ள ஒவ்வொருவரும் பதிவு செய்தனர். அதோடு, கீதா கூறியதாக கருதப்படும் நடவடிக்கைகளை அவரது கையாலும் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான அறிக்கையை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக மட்டும் குழுவினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.