பாலியல் தொந்தரவு புகார்: காவல் ஆய்வாளரிடம் விசாகக்குழுவினர் விசாரணை

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கத்தில் பாலியல் தொந்தரவு செய்ததாக புகாருக்கு உள்ளான காவல் ஆய்வாளரிடம் விசாக குழுவினர் புதன்கிழமை மேற்கொண்டனர்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கத்தில் பாலியல் தொந்தரவு செய்ததாக புகாருக்கு உள்ளான காவல் ஆய்வாளரிடம் விசாக குழுவினர் புதன்கிழமை மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே நார்த்தம்பட்டியைச் சேர்ந்தவர் கீதா(35). தற்போது, கொடைக்கானல் வட்டார காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார். இந்தநிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டை வட்டார காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றிய போது, காவல் ஆய்வாளராக இருந்த ஆவுடையப்பன் அடிக்கடி கீதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். அதோடு, விருப்பத்துக்கு உடன்பட மறுத்த காரணத்தால் பணியிலும் குறுக்கீடு செய்து வந்தாராம்.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் மீது கடந்த ஜன.2ம் தேதி  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் புகார் செய்தார். அம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் உண்மைத் தன்மையைத் கண்டறியும் வகையில் விசாக குழு விசாரணை செய்து அறிக்கை அனுப்பும் படி மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டது. அதன் வழிகாட்டுதலின் படி  விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாக கூட்டரங்கில் காவல் ஆய்வாளர் ஆவுடையப்பனிடம் விசாக குழுவினர் பூட்டிய அறையில் விசாரணை செய்தனர்.

விசாக குழுவைச் சேர்ந்த உதவி காவல் கண்காணிப்பாளர் சியமளாதேவி, காவல் ஆய்வாளர் விஜயா, விருட்சம் மகளிர் முன்னேற்ற களஞ்சியச் செயலாளர் கே.விஜயா, மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சங்கரேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேர்முக உதவியாளர் பிரபாவதி உள்ளி்ட்டோர் புகார் மனுவின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஆவுடையப்பனிடம் விசாரித்தனர்.

இதில், பெண் காவலரை பாலியல் தொந்தரவு புகார் செய்தது உண்மைதானா என்பது குறித்த புகாருக்கு காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் கூற, வாக்கு மூலத்தை குழுவினர் பதிவு செய்தனர். அதோடு, அவரது நடவடிக்கைகளை கையாலும் எழுதி வாங்கினர். இது குறித்த விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்போம் என அக்குழுவினர் தெரிவித்தனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com