கடலூர்: கவுன்சிலர்கள் 4 பேர் 3 கூட்டங்களுக்கு சஸ்பெண்ட்

நகராட்சி கூட்டத்தில் தீர்மான நகலை கிழித்து போட்டதாக கவுன்சிலர்கள் 4 பேர் 3 கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தலைவரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து
Updated on
2 min read

நகராட்சி கூட்டத்தில் தீர்மான நகலை கிழித்து போட்டதாக கவுன்சிலர்கள் 4 பேர் 3 கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தலைவரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 கடலூர் நகர்மன்ற கூட்டம், தலைவர் சி.கே.சுப்பிரமணியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. துணைத்தலைவர் ஜி.ஜெ.குமார், ஆணையர் பா.காளிமுத்து, பொறியாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீர்மானம் ஒத்திவைப்பு:

 கூட்டம் தொடங்கியதும், நகர்மன்ற துணைத்தலைவர் எழுந்து குடிநீர் குழாய் பராமரிப்பு பணி தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள செலவின தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதே கருத்தை கவுன்சிலர் வி.கந்தன் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து இந்த தீர்மானத்தை ஒத்திவைப்பதாக தலைவர் அறிவித்தார்.

வெளிநடப்பு:

 இதனைத்தொடர்ந்து பேசிய பாமக கவுன்சிலர் போஸ் ராமச்சந்திரன், காங்கிரஸ் கவுன்சிலர் சர்தார், திமுக கவுன்சிலர்கள் நடராஜன், தமிழரசன் ஆகியோர் தங்களுடைய வார்டில் குடிநீர் பிரச்னை பல மாதங்களாக தீர்க்கப்படவில்லை. மன்ற கூட்டத்தில் முன் அனுமதி தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். செலவின விவரங்கள் குறித்த முழுமையான விவரத்தை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து எதிர்கட்சி கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்கட்சி கவுன்சிலர்கள் 4 பேர் சஸ்பெண்ட்: 

 அப்போது நகர்மன்ற தலைவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி நடந்த நகர்மன்ற கூட்டத்தில், கூட்ட தீர்மான நகலை கிழித்து போட்டு, கூட்ட அரங்கில் பொருட்களை சேதப்படுத்திய 3-வது வார்டு திமுக கவுன்சிலர் நடராஜன், 11வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் சங்கர், 17வது வார்டு தேமுதிக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி, 12-வது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சர்தார் ஆகிய 4 பேரையும் அடுத்து வரும் 3 கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.

கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்:

 இதனைத்தொடர்ந்து உள்ளே வந்த எதிர்கட்சி கவுன்சிலர்கள் 11 பேர், நகர் மன்ற தலைவரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைவர் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும் கூட்டம் முடிந்ததாக அறிவித்துவிட்டு தலைவர் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர்.

அதிமுக கவுன்சிவலர்கள் மீது புகார்:

 அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட, எதிர்கட்சி கவுன்சிலர்களிடம் துணைத்தலைவர் குமார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது தலைவருக்கு எதிராக கடந்த 6-ம் தேதி நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களோடு எதிர்கட்சி கவுன்சிலர்களும் பங்கேற்றோம். ஆனால் இந்த பிரச்னையி்ல் எங்களுக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் வரவில்லை.
 மேலும் அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களும் கூட்ட அரங்கில் பொருட்களை சேதப்படுத்தினர். இதனால் அந்த கவுன்சிலர்களையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.  மேலும் அதிமுக கவுன்சிலர்கள் முன்னிலைப்படுத்தும் பிரச்னைகளுக்கு நாங்கள் இனி ஆதரவு தெரிவிக்கமாட்டேம் என்று கூறி, தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரி பேச்சுவார்த்தை:

 11 மணி தொடங்கி 12.30 மணிக்கு பிறகும் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்த நிலையில், பொறியாளர் ரவி போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட கவுன்சிலர்கள் ஆணையரிடம் கடிதம் அளித்தால், தலைவரிடம் பேசி, இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வது குறித்து உறுதியளிக்கப்பட்டதாக தெரிகிறது.   

 இதனைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் ஆணையரிடம், தலைவரின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்துவிட்டு போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com