திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயிலில் லட்ச தீப விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலின் முக்கிய விழாக்களில் லட்ச தீப விழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கடந்த 25-ம் தேதி தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து வியாழக்கிழமை மாலை வரை அந்த தங்க விளக்கில் தீபம் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.
முக்கிய நிகழ்வான லட்ச தீப விழா வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது. இதையொட்டி காலையில் திருநெல்வேலி ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கம் சார்பில் 11 பால்குடங்கள் எடுத்து வரப்பட்டன. அதன்பின்பு அம்பாள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் உற்சவர்கள் எழுந்தருளல், 308 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை, திருக்கோவில் வஸந்த மண்டபத்தி்ல் மஹேஸ்வர பூஜை, பொதுவிருந்து ஆகியவை நடைபெற்றன.
மாலையில் சுவாமி கோயில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்மன் கோயில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், ஆறுமுகநயினார் சன்னதி, வெளிப்பிரகாரங்கள் ஆகிய இடங்களில் லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. அதன்பின்பு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்கச் சப்பரத்திலும், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் சிறப்பு அலங்காரத்துடன் வீதிவலம் வந்தனர்.
இந்த விழா குறித்து கோயில் நிர்வாக அதிகாரி யக்ஞநாராயணன் கூறியதாவது: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஒரு முக்தி தலமாகும். ஸ்வேத கேது என்னும் அரசன் தனது வாரிசுக்கு முடிசூடிய பின்பு மரண பயத்தால் அவதிப்பட்டாராம். பின்னர் அவர் நெல்லையப்பரை தஞ்சமடைந்து வழிபட்டபோது அவருக்கு மரண பயத்தை போக்கி முக்தி வழங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.
சிறப்பு வாய்ந்த அமாவாசை நாள்களில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் அல்லது அதை கடைப்பிடிக்காமல் துன்பத்தில் தவிப்பவர்கள் தை அமாவாசை நாளில் முக்தி தலங்களில் தீபம் ஏற்றி வழிபட்டால் அந்த குறைகள் நீங்கி வாழ்வில் வளம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
அதன்படி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த லட்ச தீப விழா நடைபெற்று வருகிறது. கோடகநல்லூரைச் சேர்ந்த சங்கரதீட்ஷிதர் என்பவர் மூலம்தான் இந்த லட்சதீப விழா தொடங்கியதாக வரலாறு கூறுகிறது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்த லட்சதீப விழா நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
விருது வழங்கும் விழா:திருநெல்வேலி ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கம் சார்பில் நடைபெற்ற லட்ச தீப விழா, ஜவுளி மகமை சங்க நூற்றாண்டு விழா, துணி வணிகர் இலக்கிய வட்ட வெள்ளி விழாவில் விருது விழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பெருங்குளம் செங்கோல் ஆதினம் 102-வது குருமகா சந்நிதானம் கல்யாண சுந்தர சத்திய ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வாழ்த்திப் பேசினார்.
சொற்பொழிவாளர் நெல்லை கண்ணனுக்கு, இலக்கியச் செம்மல் விருதும், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பனுக்கு, தமிழ்மாமணி விருதும் வழங்கப்பட்டன. விருதுகளை திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் டி.தமிழ்ச்செல்வன் வழங்கிப் பேசினார். சங்கச் செயலர் வி.வெங்கடாசலம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை மெஹ்ரின் பிர்சாதா திருமணம்!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!
கருப்பு இசை வெளியீட்டு விழா!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

