விருதுநகர் அருகே கோட்டூரில் ரூ.1.50 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி மும்முரம்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் கிராமத்தில் 5 ஆயிரம் பேர் வரையில் வசித்து வருகின்றனர். அதோடு, இக்கிராமத்தைச் சுற்றிலும் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும், தென்மாவட்ட அளவில் பிரசித்தி
விருதுநகர் அருகே கோட்டூரில் ரூ.1.50 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி மும்முரம்
Updated on
1 min read

விருதுநகர் அருகே கோட்டூரில் ரூ.1.50 கோடியில் அமைக்கப்பட்டு வரும் நவீன பேருந்து நிலையப் பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் கிராமத்தில் 5 ஆயிரம் பேர் வரையில் வசித்து வருகின்றனர். அதோடு, இக்கிராமத்தைச் சுற்றிலும் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும், தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற கோட்டூர் குருசாமி திருக்கோயில் உள்ளது. இவ்வழியாக கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் இக்கோயிலுக்கு தென்மாவட்டப் பகுதியிலிருந்து வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கும், வழிபாடு செய்வதற்கும் பக்தர்கள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இதுபோன்று வருகிறவர்களுக்கு போதுமான அடிப்படை வசதி இல்லாதது குறைபாடாகவே இருந்து வந்தது. பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளும் வழிபாட்டு தல நிறுத்தம் முன்பாகவே பயணிகளை இறக்கி விடும் நிலையுள்ளது. அதேபோல் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்காக லாரி மற்றும் வேன் போன்ற வாகனங்களிலும் கூட்டம், கூட்டமாக வருவதால் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுகிறது.

இதை தவிர்க்கும் வகையில் இக்கிராம திருக்கோயிலின் பின்புறம் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதை நிறைவேற்றும் வகையில் இங்கு பேருந்து நிலையம் அமைப்பதற்கு கடந்த மாதம் அரசு உத்தரவிட்டது. அதோடு, பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.1.50 கோடியும் ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில் பேருந்து நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறை, பணியாளர்கள் ஓய்வறை, பொருள்கள் வைப்பறை, வணிக வளாகம், சுகாதார வளாகம், ஒரு நேரத்தில் 20 பேருந்துகள் வரையில் நிற்கும் வகையிலான பல்வேறு வசதியுடன் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது குறித்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி கூறுகையில், கிராம வளர்ச்சி உள்கட்டமைப்பு நிதியிலிருந்து நவீன பேருந்து நிலையம் 1.60 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதியுடன் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் 6 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதோடு, பேருந்து நிலைய வளாகம் முன்பு திருக்கோயிலுக்கு வருகிற பக்தர்கள் தங்கிச் செல்லும் வகையில் தலா ரூ.15 லட்சத்தில் மூன்று வளாகங்கள் அனைத்து வசதியுடன்  அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com