கரும்பு டன்னுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்க விவசாயிகள் கோரிக்கை

கரும்பு டன்னுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு  மோகனூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Updated on
2 min read

கரும்பு டன்னுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு  மோகனூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் 31ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் சங்கத் தலைவர் எஸ்.பி.கந்தசாமி தலைமையில் மோகனூரில் நடந்தது. சங்க பொதுச்செயலர் வழக்குரைஞர் என்.கே.நடராசன், வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். தொடர்ந்து, சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, புதிய தலைவராக எஸ்.பி.காந்தசாமி, பொதுச்செயலராக வழக்குரைஞர் என்.கே.நடராசன், பொருளாளராக வீ.ஸ்ரீதரன், துணைத்தலைவர்களாக டி.பி.எட்டிக்கன், டி.என்.எஸ்.ராமசாமி, துணைச் செயலர்களாக கே.கனகராஜ், சி.பி.நவலடி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 2014-15ஆம் அரவை ஆண்டுக்கு கரும்பு டன்னுக்கு ரூ.3,500 கொள்முதல் விலையை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். சர்க்கரை ஆலை அங்கத்தினருக்கு பங்கு மூலதனத்துக்கு சட்டப்படி டிவிடெண்ட் கணக்கிட்டு விரைவில் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

ஆண்டுதோறும் விவசாயிகள் சப்ளை செய்த கரும்பு டன்னுக்கு ஒரு கிலோ சர்க்கரையும், ஆலை சங்கத்தினர் பங்கு மூதலனம் ஒன்றுக்கு 2 கிலோ சர்க்கரையும் மானிய விலையில் வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு விதை கரணை மானிய விலையில் வழங்க வேண்டும். ஆலைக்கு உள்பட்ட கிராம சலைகளை ஆலை நிர்வாகம் செப்பனிட்டு பராமரிக்க வேண்டும்.

ஆலை கரும்பு உதவியாளர்கள் கரும்பு பயிரை நேரடியாக பார்வையிடுவதில்லை என்பதால் விவசாயிகளுக்கு கரும்பு பயிரிடவும், ஆலைக்கு பதியவும் ஆர்வம் குறைந்துள்ளது. எனவே, கரும்பு உதவியாளர்கள் தவறாமல் விவசாயிகளை சந்தித்து கரும்பு பயிர்களை நேரடியாக பார்வையிட வேண்டும்.

எரிசாராய ஆலை கழிவுநீரை ஆலைக்கு அருகேயும், புறம்போக்கு நிலத்திலும் ஒப்பந்ததாரர்கள் விட்டுவிடுவதால் கிணறுகளில் தண்ணீர் மாசடைந்து கொண்டுள்ளது. இதனை தடுத்து ஆலை நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை சரிந்து வருவதை கருத்தில் கொண்டு மற்ற தனியார் பாலிடெக்னிக்குகளில் வழங்குவது போல் சலுகைகளை அறிவிக்க ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, பொய்யேரி, குமாரபாளையம், மோகனூர் வாய்க்கால்களில் மார்ச் 1 முதல் 15ஆம் தேதி வரை ஆண்டுக்கு 15 நாட்கள் மட்டுமே தண்ணீர் நிறுத்தப்படும். ஆனால், நிகழாண்டு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டு சுமார் ஆறரை கோடி ரூபாய் அளவில் கான்கிரீட் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, 60 நாட்களுக்கு மேலாக தண்ணீர் இல்லாததால் கரும்பு, நெல், வாழை, வெற்றிலை முதலிய விவசாய பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதற்கு மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையின் மெத்தனமே காரணமாகும். வரும் காலங்களில் 15 நாட்களுக்கு மேல் இந்த வாய்க்கால்களில் தண்ணீர் நிறுத்தாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை லாபத்தில் இயங்கிட விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com