விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களிடம் இருந்து உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போருக்கு அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் பயனடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 45 வயதும், மற்ற பிரிவினருக்கு 40 வயது வரையிலும் இருக்க வேண்டும். அதோடு, நாள்தோறும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகிறவராக இருக்கக் கூடாது.
மேலும், ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்குள்ளும், சுயதொழில் செய்து வருகிறவராகவும் கட்டாயம் இருத்தல் கூடாது. இதில், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தோல்வியடைந்து பதிவு செய்தோருக்கு ரூ.100ம், இதே வகுப்பில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு ரூ.150ம், பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.200ம், பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம் என மாதந்தோறும் உதவித் தொகையாக வழங்கப்பட இருக்கிறது.
இதேபோல், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள பெற்று கல்வித் தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இதில், எஸ்.எஸ்.எல்.சி மற்றும் அதற்கு கீழும் பதிவு செய்தோருக்கு ரூ.300ம், பிளஸ்2 தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.375ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.450ம் என மாதந்தோறும் வழங்கப்படும். இவர்களுக்கு மட்டும் வயது வரம்பு எதுவும் கிடையாது, ஆனால் கல்வித் தகுதிகளை பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது.
எனவே மேற்குறிப்பிட்ட தகுதிகளை பதிவு செய்தவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விலையில்லாமல் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். இத்திட்டத்தில் பயனடையும் ஒவ்வொருவரும் தேசிய வங்கிக் கணக்கு தொடங்கியதற்கான செல்லேட்டின் நகலையும் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். ஏற்கனவே இத்திட்டத்தில் நிகழாண்டில் உறுதிமொழி ஆவணம் சமர்பிக்காதவர்களும், 12 தவணைகள் உதவித் தொகை பெறாத பயனாளிகளும் உறுதிமொழி படிவங்களை பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்து பயனடையும் படி ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.