காரைக்காலில் அரசு நிறுவனமான என்.ஆர். மலிவு விலை உணவகத்தில் தினமும் வகை வகையான மலிவு விலை அல்வா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் தமிழகத்தில் உள்ளதுபோல் மலிவு விலை உணவகம் மாவட்ட ஆட்சியரகம் அருகே என்.ஆர். உணவகம் என்ற பெயரில் இயங்கிவருகிறது. காலை, மதியம், மாலை வேளைகளில் உணவு வகைகள் ரூ.10, ரூ.15 என்ற விலையில் பூரி, இட்லி, பொங்கல், தயிர், கீரை, சாம்பார் சாதம், வெஜிடெபிள் பிரியாணி மற்றும் நூடுல்ஸ், கோதுமை உப்புமா, கிச்சடி, ஸ்வீட், சூப் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
சந்தையில் உள்ள உணவகங்களைக் காட்டிலும் குறைந்த விலையில் சுவை மிக்கதாக இருப்பதால் காலை முதல் இரவு வரை உணவகத்தில் ஏராளமானவர்கள் நின்று பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
கூடுதலாக காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் உணகக் கிளை அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது இந்த உணவகம்.
இப்போது புதன்கிழமை முதல் தினமும் ரூ.10 விலையில் வகை வகையான அல்வா மாலை நேரத்தில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் உருளைக் கிழங்கு அல்வா தயார் செய்து விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் ஆ.சுரேஷ் கூறும்போது, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியின் ஆதரவோடு உணவகம் நல்ல முறையில் இயக்கப்படுகிறது. மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை தருகிறோம். லாபத்தை எதிர்பார்த்து இதனை செய்யவில்லை.
தினமும் மாலை நேரத்தில் ரூ.10 விலையில் பல்வேறு வகையான அல்வா தயார் செய்து விற்க முடிவெடுத்தோம். அதன்படி முதல் நாளில் உருளைக் கிழங்கு அல்வா தயார் செய்துள்ளோம். ஒவ்வொரு நாளும் காளான், கேரட் உள்ளிட்ட பல்வேறு பொருள்களில், பல்வேறு நிறத்தில் சுவையான அல்வா செய்து விற்கவுள்ளோம். இது பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை முடிந்து செல்லும் தொழிலாளர்கள், அரசுப் பணியாளர்களை வெகுவாக ஈர்க்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.