வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.15 லட்சம் மோசடியில் ஈடுபட்ட செயலரை, வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.மேலும் முதுநிலை எழுத்தராக பணியாற்றியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக, பழனி கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பொ.செல்வராஜூக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து கடந்த 2013 ஜூலை 23ஆம் தேதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.அதன்பேரில் தொப்பம்பட்டி கூட்டுறவு சார் பதிவாளர் த.சேகர், ஒட்டன்சத்திரம் சங்கத்தில் விசாரணை நடத்தியுள்ளார். அந்த சங்கத்தில் 9 பேர் நகை அடகு வைத்த விவரம் இருந்துள்ளது. ஆனால் 7 பேரின் நகைகள், வேறு இடத்தில் மறு அடகு வைக்கப்பட்ட விவரம் விசாரணையின் போது வெளியானது.
மேலும் மறு அடகு வைத்த நகைகளின் மூலம் ரூ.15 லட்சம் வரை முறைகேடு நடந்ததும் கண்டறியப்பட்டது. அந்த சங்கத்தின் செயலர்(பொறுப்பு) ரா.வெங்கடாசஜலம், முதுநிலை எழுத்தர் பொ.அய்யனசாமி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.இதனை அடுத்து வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸில், கடந்த மே 2ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய திண்டுக்கல் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் கலாவதி தலைமையிலான போலீஸார், கூட்டுறவு சங்கத்தின் செயலராக(பொறுப்பு) பணியாற்றிய வேடசந்தூர் வட்டம், குட்டம் அடுத்துள்ள தாசரிப்பட்டியைச் சேர்ந்த ரா.வெங்கடாஜலம் என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மேலும் முதுநிலை எழுத்தராக பணியாற்றிய ஒட்டன்சத்திரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பொ.அய்யனசாமி என்பவரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.