சிதம்பரம் தெப்பக்குளத்தில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் எதிரே உள்ள தெப்பக் குளத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக


சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் எதிரே உள்ள தெப்பக் குளத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டினை கண்டெடுத்துள்ளனர்.
கல்வெட்டு குறித்து ஆய்வாளர் இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் தெரிவித்ததாவது:
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குள படிக்கட்டில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. முதலாம் பராந்தகன், சோழ தேசத்தை கிபி 907-953 வரை ஆண்ட மன்னனாவான். இவனே தில்லை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பொற்கூரை வேய்ந்த பெருமைக்குரியவன். இவனுக்கு வீரசோழன் என்ற பட்டப்பெயர் இருந்தது. முதலாம் பராந்தகம் காட்டுமன்னார்கோயில் அருகே வீரநாராயணஏரியை உருவாக்கி சோழ நாட்டை தன்னிகரில்லா மண்டலமாக மாற்றிய பெருமைக்குரியவனர். தற்போகு வீராணம் ஏரி என அழைக்கப்படுகிறது.
இவனால் வெளியிடப் பெற்ற உத்திரமேரூர் கல்வெட்டே தற்போதைய நவீன ஊராட்சி முறைக்கு அடித்தளமிட்டது எனலாம். இத்தகைய பெரும் வாய்ந்த முதலாம் பராந்தகன் தில்லை நடராஜர் கோயிலுக்கு பல்வேறான அறக்கொடைகளை வழங்கி உள்ளான். காலப்போக்கில் கல்வெட்டுகள் அயலவர் படையெடுப்புகளால் அழிந்தமையால், எஞ்சிய கல்வெட்டுகளே பராந்தகனின் சிறப்பை பறை சாற்றுகின்றன.
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் கீழ்புறம் காணப்படும் படிக்கட்டு வரிசையில், கீழிருந்து மூன்றாவது படிக்கட்டில் இரண்டாக உடைந்த நிலையில் ஐந்து வரிகளை கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டின் முதல் வரியில் கோப்பரகேசரி என்ற சொல்லை மட்டுமே வாசிக்க முடிகிறது. எஞ்சிய சொற்களை படிக்க இயலாத வண்ணம் சிதைந்துள்ளது. கல்வெட்டின் ஏனைய வரிகள் ஸ்ரீ உத்திர மாணிக்கபுரத்து வியாபாரி ஒருவர் வண்ணக்கர் மற்றும் நம்பிமாருக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வண்ணக்கர் என்பது சலவை தொழிலாளியையும், வண்ண சித்திரங்கள் வரையும் கலைஞனையும் கல்வெட்டு சொற்கள் குறிக்கிறது. கல்வெட்டின் இறுதி வரியில் கிரந்த எழுத்தில் பன்மஹெஷ்வர ரகைூ என பொறிக்கப்பட்டுள்ளது. பன்மஹெஷ்வர ரகைூ என்பது சிவன் கோவில்களில் அமைக்கபட்ட அறச்செயல்களை சிவனடியார்கள் காப்பார்களாக என்று வேண்டுவதாகும். இக்கல்வெட்டில் பரகேசரி என்று குறிக்கப்படுவதை கொண்டும், மொழிநடை கொண்டும் முதலாம் பராந்தகனின் பிற கல்வெட்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில், இக்கல்வெட்டு முதலாம் பராந்தகன் வெளியிட்டதே எனலாம்.
முகலாம் ராஜராஜ சோழனுக்கு முப்பாட்டனான முதலாம் பராந்தகன் காலத்திலேயே தில்லை திருக்கோயில் அரசர், வணிகர் என அனைவரும் போற்றும் திருக்கோயிலாக இருந்து வந்ததை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அக்கல்வெட்டு தில்லை நடராஜர் கோயிலில் இடம் பெற்றிருந்த கல்வெட்டாகும். பிற்காலத்தில் நடைபெற்ற தெப்பக்குள புணரமைப்பு பணியின்போது, இக்கல்வெட்டு இங்கு இடம் பெயர்ந்துள்ளது. கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்து காணப்படுவதால், ஆட்சியாண்டு குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இத்தெப்பக்குளத்தில் மேலும் சில கல்வெட்டுகள் படிக்கட்டுகளில் காணப்படுகிறது குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...