காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உத்சவம்

காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.
காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உத்சவம்
Updated on
1 min read

காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.

சிவபெருமானால் அம்மேயே என்று அழைக்கப்பட்ட பெருமை மிக்கவர் புனிதவதியார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரானவர் அவர்.  அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாக உருவானவர். தேவாரத்துக்கு முன்பு திருவந்தாதி படைத்த பெருமைக்குரியவர். காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சார்பில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.  இத்திருவிழா வியாழக்கிழமை ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு (பரமதத்தர்) முதல் தொடங்கியது. சிறப்பு மேள வாத்தியங்கள், குதிரை பூட்டிய மின் அலங்கார ரதத்தில் பரமதத்தர் புறப்பாடு நடைபெற்றது. 2-ம் நாளான வெள்ளிக்கிழமை  அம்மையாரின் திருக்கல்யாண உத்சவம் அம்மையார் மணிமண்டப வளாகத்தில் நடைபெற்றது.

திருக்கல்யாணத்திற்கு முன்னதாக காலை 8 மணிக்கு புனிதவதியார் திருக்குளக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.  பின்னர் வீதியுலா முடிந்து திருக்கல்யாண இடத்துக்கு பரமதத்தர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

திருக்கல்யாண நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள், திரளான மக்கள் முன்னிலையில் திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜையை சிவாச்சாரியார்கள் செய்தனர். தொடர்ந்து சிவாச்சாரியார் அம்மையார் கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டினார். அப்போது பக்தர்கள் அட்சதையை தூவி அம்மையாரை வழிபட்டனர். அம்மையார் திருக்கல்யாண்தை தரிசிப்பது திருமணமாகாதோர், சுமங்கலிப் பெண்களுக்கு மிகுந்த விசேஷமென கருதப்படுவதால், மண்டபம் உள்ளேயும், வெளியேயும் திரளானவர்கள் கலந்துகொண்டனர். திருமாங்கல்யதாரணம் முடிந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டது.

திருக்கல்யாண நிகழ்ச்சியை மண்டபத்தின் உள்ளே இருந்தோர் நேரடியாக கண்டனர். வெளியிலும் ஏராளமான மக்கள் இருந்தபடியால், திருக்கல்யாணத்தை தொலைக்காட்சி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருக்கல்யாணத்தில் பெரும்பான்மையாக பெண்களே கலந்துகொண்டனர். ஆபரணங்கள் அணிந்து வந்திருந்தமையால், ஏராளமான போலீஸார் சீருடை மற்றும் சீருடையின்றி கண்காணிப்பு மற்றும் பாதுபாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் தாம்பூலப் பை வழங்கப்பட்டது.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், வடக்குத் தொகுதி பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன், புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன்,  காவல் கண்காணிப்பாளர் (பொ) கு.ப.பழனிவேலு,  காரைக்கால் விற்பனைக் குழுத் தலைவர் கே.ஆர்.உதயக்குமார், வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் ஆ.சுரேஷ், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஆர்.மாணிக்கவாசகம் மற்றும் சமாதானக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com