குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் உதவி தொகையை அமைச்சர்கள் வழங்கினார்கள்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே போத்தம்பட்டி கிராமத்தில் கடந்த 24.11.2013 அன்று கண்மாய் குளத்தில் குளிக்கச் சென்ற போது தவறி உயிரிழந்த 5 மாணவிகளின் குடும்பத்தினரிடம் முதல்வர்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே போத்தம்பட்டி கிராமத்தில் கடந்த 24.11.2013 அன்று கண்மாய் குளத்தில் குளிக்கச் சென்ற போது தவறி உயிரிழந்த 5 மாணவிகளின் குடும்பத்தினரிடம் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் உதவித் தொகைக்கான காசோலைகளை  அமைச்சர்கள் வழங்கினார்கள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு உதவித் தொகையும் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியும் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் பங்கேற்று உயிரிழந்த 5 மாணவிகளின் பெற்றோர்களான பா.கோபால்ராஜ், எம்.ராமசாமி, எம்.முருகன்(இரு வாரிசுகள்), சி.சண்முகராஜ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.

இதேபோல், காளையார்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், சிவகாசியைச் சேர்ந்த அ.ரீனா ஆகியோருக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான நியமன ஆணைகளையும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்விக்கு கிராம உதவியாளர் பணிக்கான நியமன ஆணையையும் அமைச்சர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜி.சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வேலாயுதம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மயில்சாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கொங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com