மதுரையில் அதிமுகப் பிரமுகர் கொலை: சடலம் பெற மறுத்து உறவினர் மறியல்

மதுரை கரும்பாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி.அதிமுக துணைவட்டச் செயலர். இவர் வெள்ளிக்கிழமை இரவு தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வந்தபோது வழிமறித்த மர்மக்கும்பல்
Updated on
1 min read

மதுரையில் முன்விரோதத்தில் அதிமுக பிரமுகர் கொல்லப்பட்டார். அவரது சடலத்தைப் பெற மறுத்து உறவினர்கள் சனிக்கிழமையன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை கரும்பாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி.அதிமுக துணைவட்டச் செயலர். இவர் வெள்ளிக்கிழமை இரவு தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வந்தபோது வழிமறித்த மர்மக்கும்பல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயபாண்டி உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக ஜெயபாண்டி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது உறவினர் சரவணன் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர். கொலையில் கரும்பாலை பகுதியைச் சேர்ந்த வடிவேலு உள்ளிட்ட 25 பேர் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக 5 பேரைப் பிடித்து விசாரித்துவருகின்றனர்.

கொலையுண்ட ஜெயபாண்டியின் சடலம் மதுரை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அண்ணாநகர் போலீஸார் மீது ஜெயபாண்டியின் உறவினர்கள் புகார் கூறினர். கரும்பாலை பகுதியில் அசம்பாவிதத்தில் ஈடுபடுவதாக சந்தேகிப்போர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும், போலீஸ் அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்படவில்லை என்றும் புகார் கூறி சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மாநகர் சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சமந்த்ரோஹன் ராஜேந்திரா உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டோரிடம் சமரசம் பேசினர். அதன் பின் மறியல் கைவிடப்பட்டது.

பிரேதப் பரிசோதனைக்குப் பின் ஜெயபாண்டியின் சடலத்தைப் பெற அவரது குடும்பத்தாரும், உறவினர்களும் மறுத்தனர். அண்ணாநகர் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் பிரேதப் பரிசோதனை அறை முன்பு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர். போலீஸ் உயரதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அதிமுக பிரமுகர் ஜெயபாண்டியின் சடலத்தை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். பின்னர் தத்தனேரி சுடுகாட்டுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு சடலம் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com