பல்லவர், பாண்டியர், முற்கால சோழர்கள் என வேந்தர்கள் பலரும் போற்றிய மூத்ததேவியின் வழிபாடு காலப் போக்கில் கவனிப்பாரின்றி போனது. மூத்ததேவியை மக்களும், மன்னரும் செல்வ வளம் தகும் தேவியாகவே வழிபட்டு வந்திருக்கின்றனர். மூத்ததேவியே, எங்களுக்கு தீமை, சோம்பல், வறுமை, நோய் இவைகளை வழங்காதே என்ற வேண்டிக் கொள்வதற்கே இவ்வழிபாடு பின்பற்றப்பட்டு வந்துள்ளது. கிபி 11-ம் நூற்றாண்டு வரை மக்களால் இத்தெய்வம் வழிபடப்பட்டு சிவாலயங்களில் பரிவார தேவதையாக எங்கு அமைக்க வேண்டும், ஊரில் தனியாக மூத்ததேவி கோயில் எங்கு அமைக்க வேண்டும் எனத்தனியாக சிற்ப சாஸ்திர நூல்கள் விரிவாக கூறுகின்ற அளவுக்கு இத்தெய்வ வழிபாடானது தமிழ்நாடெங்கும் பரவலாக இருந்துள்ளது. அதன் பின்னர் இத்தெய்வ வழிபாடு துரதிருஷ்டத்திற்கும், தீட்டுக்கும், திருஷ்டிக்கும், சோம்பலுக்கும், அழகின்மைக்கும் குறியீடாக காலப்போக்கில் கற்பிக்கப்பட்டது. வைணவ சமயத்தில் திருமகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பெற்றதால், இவ்வழிபாடு வெறுக்கப்பட்டு புறம் தள்ளப்பட்டது. மூத்ததேவியை மூதேவி என இழிவுபடுத்தும் அளவுக்கு இத்தெய்வ வழிபாடு வெறுத்து ஒதுக்கப்பட்டது.