ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்வதற்கான நிதி உதவி பெற விருதுநகர் மாவட்டத்திலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்வர்கள் ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்வதற்கு ஆண்டு தோறும் தனிநபருக்கு ரூ.20 ஆயிரம் உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி பெற தமிழகத்தில் வசித்து வரும் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகிறவர்களாக இருக்க வேண்டும். மேலும், கடவு சீட்டும் வைத்திருக்க வேண்டும்.
இதுபோன்ற தகுதியுடையவர்கள் ஜெருசலம் செல்வதற்கு நிதியுதவி பெற மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையை அணுகி விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அதோடு, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து விவரம் மற்றும் சான்றிதழ்கள் இணைத்து, அஞ்சல் உறையின் மேல் பகுதியில் ஜெருசலம் புனித பயணம் செல்வதற்கான விண்ணப்பம் என குறிப்பிட வேண்டும்.
அதையடுத்து மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், அண்ணாசாலை, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்து உதவித் தொகையை பெற்று பயனடையும்மாறும், கடந்த ஆண்டுகளில் இதே திட்டத்தில் பயன் பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கூடாது என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.