தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.2.88 லட்சம் மோசடி செய்ததாக தன்னார்வ தொண்டு நிறுவனம் மீது விவசாயக்கூலி தொழிலாளிகள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை புகார் தெரிவித்தனர்.
ராசிபுரம் வட்டம் குருக்கபுரம் கிராமத்துக்கு உள்பட்ட கொழிஞ்சிப்பட்டியில் உள்ள தனியார் கட்டடத்தில் ட்ரைபல் வெல்ஃபேர் டிரஸ்ட் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் திட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ள ராஜூ என்பவர் தொடக்க வேளாண்மை வங்கிகளில் கடன்பெற்றுத்தருவதாகக் கூறி வரைவோலை, தபால் செலவு உள்பட தலா 2,275 வீதம் 127 விவசாயத் தொழிலாளர்களிடம் மொத்தம் ரூ.2,88,000 லட்சத்தை கடந்த 2013 பிப்ரவரி மாதம் பெற்றதாக தெரிகிறது.
அதன்பிறகு இதுவரை கடன்தொகை பெற்றுத்தராததுடன், கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் ராஜூ ஏமாற்றி வருகிறாராம். பணத்தை கொடுத்த தொழிலாளிகள் பலமுறை அவரை தொடர்பு கொண்டு கேட்டும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் பாதிக்கப்பட்ட அவர்கள் பாமக மாநில துணை பொதுச்செயலர் செந்தில்குமார் தலைமையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமாரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
அப்போது ராமநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த பி.பெரியசாமி கூறியதாவது:
ட்ரைபல் வெல்ஃபேர் டிரஸ்ட் தன்னார்வ தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜு, கடன்பெற்றுத்தர ஆள் சேர்த்துவிடும்படி கேட்டுக் கொண்டதன்பேரில் ராமநாயக்கன் பட்டி, தோட்டக்கூர்பட்டி, அணைப்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளரிகளை அவரிடம் அறிமுகம் செய்துவைத்தேன். தொடர்ந்து, ராஜூ 127 நபர்களிடம் மொத்தம் ரூ.2.88 லட்சத்தை வசூலித்துவிட்டு தற்போது 1.5 ஆண்டாக ஏமாற்றி வருகிறார். இதனால், பணத்தை இழந்தவர்கள் தற்போது என்னை தொந்தரவு செய்கின்றனர். இதற்கிடையே, மே மாதம் வரை பணம் தருவதாக கூறி வந்த ராஜு, அதன்பிறகு தலைமறைவாகி விட்டார்.
எனவே, பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளிகளிடம் பணத்தை திரும்பப் பெற்றுத்தரவும், மோசடியில் ஈடுபட்ட தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜு, அதன் உறுப்பினர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மனுவை பெற்றுக் கொண்ட எஸ்பி, இப்புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.