புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்: ஏற்கனவே அறிவித்தபடி இன்று திறக்கப்படாததால் பொது மக்கள், பயணிகள் அதிருப்தி...

புதுக்கோட்டையில் சுமார் 1.17 கோடி மதிப்பில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை இன்று திறப்பதாக மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் ஏற்கனவே
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்: ஏற்கனவே அறிவித்தபடி இன்று திறக்கப்படாததால் பொது மக்கள், பயணிகள் அதிருப்தி...
Published on
Updated on
2 min read

புதுக்கோட்டையில் சுமார் 1.17 கோடி மதிப்பில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை இன்று திறப்பதாக மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் ஏற்கனவே அறிவித்திருந்தபடி திறக்கப்படாததால் பொதுமக்களும், பயணிகளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டையில்  இயங்கி வரும் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்டதால், கட்டடங்களும், தரைத்தளமும் சேதமடைந்து பொதுமக்களையும், பயணிகளையும் அச்சுறுத்திக்  கொண்டிருந்தன. இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் ரூ. 50 கோடி சிறப்பு நிதியை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்தார். இதைத்தொடர்ந்து அந்த நிதியில் ரூ. 1.17 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு மற்றும் சிமெண்ட் தரைத்தளமும் அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் வரை  புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரில் உள்ள காலியிடத்தில் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாகத் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கு பேருந்துகளும், பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இந்தத் தற்காலிக பேருந்துநிலையத்தின் தரைத்தளம் முறையாகச் சரி செய்யாமல் விட்டதால் அப்பகுதியில் பள்ளம், மேடுகள் நிறைந்த பகுதிகளாகவே காட்சியளித்தன. அதில்தான் பேருந்துகள் அனைத்தும் தாவிக்குதித்துச் செல்கின்றன. இதனால், அப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாவதும், மழை பெய்தால்   நீர் சூழ்ந்து  சேறாகவும், உழவு நிலம் போல காட்சியளிக்கும்.  இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.  இதனிடேயே புதிய பேருந்து நிலையத்தில் 90 சதவிகிதத்துக்கும் மேலான சீரமைப்புப்பணிகள் நிறைவடைந்துள்ளநிலையில், கடந்த வாரம் பணிகளை நேரி்ல் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் இன்று பேருந்து நிலையம் திறக்கப்படும் என தெரிவித்தார். நகராட்சி நிர்வாகமும் அதை வழி மொழிந்தது.
இதனால், கடந்த பல மாதங்களாக சிரமப்பட்டு வந்த பொதுமக்கள், பயணிகள், கடைக்காரர்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்தன். மேலும், அனைவரும் தயாராக இருந்தனர். வியாழக்கிழமை புதிய பேருந்து நிலையப்பகுதி  மறுநாள் நடைபெறும்  திறப்பு விழாவைக் காணத் தயாராக இருந்தது.

இந்நிலையில், இன்று காலையில் வெளியூர்களில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகளும், உள்ளூர் வாசிகளும் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டிருக்கும் என்ற ஆவலுடன் அப்பகுதியைக் கடந்த போது, பேருந்து நிலையம் வழக்கம் போல மூடிக்கிடந்ததால் ஏமாற்றமடைந்தனர். கடந்த மாதம் வரை மக்களவைத் தோ்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலில் இருப்பது காரணமாகக்கூறப்பட்டது, அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் பல முறை ஆய்வு, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டது போன்ற தொடர் நிகழ்வுகளுக்குப்பின் இறுதியாக ஜூன்.6  திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், திட்டமிட்டபடி திறக்கப்படாதது  ஏன் என்பது புரியாத புதிராகவே நீடிக்கிறது. பணிகள் முடிந்தநிலையில் உள்ள புதியபேருந்துநிலையத்தை  இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக திறக்கவேண்டும் என்பதே தினம் தினம் சிரமப்பட்டுவரும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதை மாவட்ட அமைச்சர்கள் உரிய கவனம் செலுத்தி உடனடித் தீர்வு காண வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com