விருதுநகர் பகுதியில் 3 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்

விருதுநகர் அருகே பட்டம்புதூர், கெப்பிலிங்கம்பட்டி மற்றும் திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு வெள்ளிக்கிழமை இரவு
Updated on
1 min read

விருதுநகர் பகுதியில் நடைபெற இருந்த 3 சிறுமிகளின் திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

விருதுநகர் அருகே பட்டம்புதூர், கெப்பிலிங்கம்பட்டி மற்றும் திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் உடனே மாவட்ட சமூக நலத்துறை, ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களை ஆய்வு செய்யும் படி உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் பாண்டியம்மாள், ஆள்கடத்தல் காவல் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் பாதரமாதா மற்றும் சைல்டு லைன் அலுவலர் லதா உள்ளிட்டோர் குறிப்பிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் விசாரித்தனர். அப்போது குறிப்பிட்ட வயதை அடையாத சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற இருப்பது தெரியவந்தது.

இதில், விருதுநகர் அருகே பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகள் முனியம்மாள்(17) என்பவருக்கும், குப்பாம்பட்டியைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் வேல்முருகன்(23) ஆகியோருக்கும் திருமணம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. அதேபோல், கெப்பிலிங்கம்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகள் பாண்டியம்மாள்(17), கண்ணுடையாபுரத்தைச் சேர்ந்த ஜே.சி.பி டிரைவரான தமிழரசன்(24) மற்றும் திருத்தங்கல்லைச் சேர்ந்த மகாலிங்கத்தின் மகள் வனராணி(16)என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜாபாண்டி(25) ஆகியோருக்கும் வருகிற 9-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.

அதன் பின்னர் திருமண வீட்டார்களை அழைத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டனர். அப்போது மணமகள் வீட்டாரிடம் சான்றிதழ்களை காண்பிக்கும் படி கூறியுள்ளனர். அதில் அந்த சிறுமிகள் 10, 11-வது படித்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக பெற்றோர்களிடம் பெண்ணிற்கு குறிப்பி்ட்ட 18 வயதுக்கு மேல் தான் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என அரசு விதிமுறை உள்ளது. அதற்கு முன்பு திருமணம் நடத்தி வைத்தால் சட்டப்படி குற்றமாகும். அதனால், குறிப்பிட்ட வயதுக்கு வந்தவுடன் திருமணத்தை நடத்திக் கொள்வதாகவும், அதற்கிடையே நடத்தி வைக்கமாட்டோம் எனக் கூறி எழுதி வாங்கிக் கொண்டனர்.

அதுவரையில் சிறுமிகள் பாண்டியன் நகரில் உள்ள குழந்தைகள் நல காப்பாகத்தில் தங்கியிருக்கவும், மீண்டும் படிப்பதற்கு தேவையான அறிவுரைகளும் வழங்கி திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் சைல்டுலைன் அலுவலர்கள் ஆகியோர் மூலம் தொடர்ந்து கிராமங்களில் கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com