அரசு அலுவலகங்களில் அலுவலர்களால் ஏற்படும் பாலியல் சீண்டல்களை தடுக்க மாநில, மாவட்ட அளவில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்க அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மகளிர் மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஜே.லெட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் கே.சிவஞானம் வரவேற்புரை வழங்கினார். சி.ஐ.டி.யு தொழிற் சங்கத்தின் மாநில செயலாளர் எம்.மகாலட்சுமி மகளிர் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.உமாமகேஸ்வரி, மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் யு.சுமதி ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஆர்.அய்யம்மாள் அறிக்கை சமர்பித்தார். அதையடுத்து மாநாடு தொடர்பாக விவாதத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியாக மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர் பி.லட்சுமி நன்றி கூறினார்.
இந்த மாநாட்டில் பெண்கள் அரசு அலுவலங்களில் இரவு 8 மணிவரையில் பணி செய்து விட்டுச் சென்றால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுவதால், அரசு துறையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.பணிபுரியும் அலுவலகங்களில் அலுவலர்களால் பாலியல் சீண்டல்கள் ஏற்படுவதை, தடுக்கவும் இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காணவும் மாநில, மாவட்ட அளவில் விசாரணை குழு அமைக்க வேண்டும்.அலுவலகங்களில் பெண் பணியாளர்களுக்கு தனியாக கழிப்பறை வசதியுடன் ஓய்வறை அமைத்தல் மற்றும் சட்டப்பேரவை, மக்களவை மற்றும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.