விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சேரன்மகாதேவி கோயிலில் சுவாமி சிலைகள் உடைப்பு- தீ வைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் கொழுந்துமாலை அருள்மிகு பாலசுப்பிரமணிசுவாமி கோயிலில் சுவாமி சிலைகள் உடைத்து, கோயில் கதவுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை

News image
Updated On :16 ஜூன் 2014, 2:18 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் கொழுந்துமாலை அருள்மிகு பாலசுப்பிரமணிசுவாமி கோயிலில் சுவாமி சிலைகள் உடைத்து, கோயில் கதவுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேரன்மகாதேவி களக்காடு பிரதான சாலையில் கொழுந்துமாலையில் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி விசாகம், கார்த்திகை தீபத் திருவிழா ஆகியன வெகு சிறப்பாக நடைபெறும். சில தினங்களுக்கு கோயிலில் வைகாசி விசாகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சேரன்மகாதேவி பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று தரிசன் செய்தனர்.

இக்கோயில் அமைந்துள்ள பகுதி வழியாக தினமும் பக்தர்கள், பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதுண்டு. திங்கள்கிழமை அங்கு நடைபயிற்சி சென்றவர்கள் கோயிலில் இருந்து புகை மூட்டம் காணப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தனர். கோயிலுக்கு சென்று பார்த்தபோது, கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கோயில் வளாகத்தில் இருந்து விநாயகர் சிலை, சண்டிகேஸ்வரர், சித்தர் பீடம் ஆகிய சிலைகளை உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.கோயிலின் உள்பக்க கதவை உடைக்க முடியாததால் அக்கதவுக்கு தீ வைக்கப்பட்டிருந்தது. சேரன்மகாதேவி போலீஸார் கோயிலுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கோயிலில் விழாக் காலங்களில் மட்டும் சுவாமிக்கு நகை அணிவிக்கப்படும். பின்னர் நகைகள், அங்குள்ள உண்டியல் ஆகியவற்றை நிர்வாகத்தினர் சிறப்பு நிகழ்ச்சியில் முடிந்ததும் எடுத்து சென்று விடுவது வழக்கம். சில தினங்களுக்கு முன் வைகாசி விசாகம் நடைபெற்றது. திருவிழா முடிந்ததும் சுவாமி நகைகள், உண்டியல் ஆகியவற்றை நிர்வாகிகள் எடுத்து சென்றிந்தனர்.

கோயிலில் திருடும் நோக்கத்தில் வந்த மர்ம நபர்கள் உண்டியல், சுவாமி நகைகள் எதுவும் இல்லாததால் ஆத்திரத்தில் சுவாமி சிலைகளை உடைத்தும், கதவுக்கு தீ வைத்து சென்றுள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர் சம்பவங்கள்: சேரன்மகாதேவி அருகே கரிசல் கிராமத்தில் சில தினங்களுக்கு கட்டட ஒப்பந்தக்காரர் வீடு உள்பட 3 வீடுகளில் இருந்து 50 பவுன் எடையுள்ள தங்கநகைகள் திருடப்பட்டன. சேரன்மகாதேவி அருகே மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் இருந்து தங்கநகையினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

கடந்த 2 தினங்களுக்கு வீரவநல்லூரில் அஞ்சல் நிலையத்தை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் நடைபெற்றது. சேரன்மகாதேவி, வீரவநல்லூர் பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களால் பொதுமக்களிடையே அச்சம் உள்ளது. காவல் நிலையங்களில் போதிய காவலர்கள், குற்றப்பிரிவில் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.