இடைநீக்க அறிவிப்பை அவமரியாதையாக கருதுகிறேன்: கே.பி.ராமலிங்கம் எம்பி

குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவித கேள்வியும் எழுப்பாமல் ஊடகங்கள் வாயிலாக இடைநீக்க அறிவிப்பு செய்திருப்பதன் மூலம் திமுக தலைமை என்னை அவமானம் செய்திருப்பதாக கருதுகிறேன் என்று
Updated on
2 min read

குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவித கேள்வியும் எழுப்பாமல் ஊடகங்கள் வாயிலாக இடைநீக்க அறிவிப்பு செய்திருப்பதன் மூலம் திமுக தலைமை என்னை அவமானம் செய்திருப்பதாக கருதுகிறேன் என்று மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

திமுகவில் மாநில விவசாய அணி செயலராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வரும் கே.பி.ராமலிங்கம், 2014 மக்களவைத் தேர்தலில் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்து திமுகவிலிருந்து கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு திமுகவில் சேர்ந்த காலத்தில் இருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கட்சிக்காக தீவிரமாக உழைத்து வருவதுடன், எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளேன். 2003ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சித்தபோது திமுக விவசாய அணி சார்பில் அனைத்து விவசாய சங்கத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து கோவையில் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது மத்தியில் பாஜக கூட்டணியில் திமுக அங்கம் வகித்திருந்தபோதும் இப்போராட்டத்தில் அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்டோரை இணைத்து இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த போராட்டமே 2004-இல் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பு உருவாகவும், அதன்மூலம் திமுக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெறவும் அடித்தளமாக அமைந்தது. மேலும், இந்த போராட்டம் காரணமாகவே இலவச மின்சாரம் ரத்து செய்யும் நடவடிக்கையை ஜெயலலிதா அரசு கைவிட்டது.

இதுதவிர, காவிரி பிரச்னையில் ஜெயலலிதா அரசுக்கு எதிராக விவசாயிகளை ஒருங்கிணைத்து மனிதசங்கிலி, தஞ்சையில் மாநாடு, கருப்புக்கொடி போராட்டம் என 2216 கூட்டங்கள், கருத்தரங்குகள், போராட்டங்களையும் நடத்தியுள்ளேன். அந்தவகையில், கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளில் ஒருவரான என்னை, எந்தவித கேள்வியுமின்றி ஊடகங்கள் வாயிலாக இடைநீக்கம் முடிவை அறிவித்திருப்பதை பெரும் அவமானமாக கருதுகிறேன். இந்த செயல் தலைவர் கருணாநிதியின் மனநிறைவுடன் செய்திருக்கிறாரா என்பதைவிட யாரை திருப்திபடுத்த இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என தெரியவில்லை.

தொடர்ந்து, கட்சித் தலைமையிடம் இருந்து எவ்வித நோட்டீஸ் வருகிறதோ, அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்கள் மூலமாகவே கட்சி தலைமைக்கு பதில் அளிப்பேன். திமுக ஒரு சுயமரியாதை இயக்கம். அந்த சுயமரியாதை எங்களுக்கும் உள்ளது. எனவே, இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், 1980-84, 1984-89 என இரண்டு முறை அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1990-இல் திமுகவில் இணைந்த இவருக்கு மாநில விவசாய அணி இணைச் செயலராக பதவி வழங்கப்பட்டது. பின்னர், 1996 முதல் மாநில விவசாய அணிச் செயலராக இருந்து வந்தார்.

இதற்கிடையே, 1996ஆம் ஆண்டு திருச்செங்கோடு எம்பி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, 1998 மக்களவை தேர்தலில் மீண்டும் திருச்செங்கோடு தொகுதியிலும், 2001 சட்டப்பேரவை தேர்தலில் ராசிபுரம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2009-இல் விவசாயத் தொழிலாளர் நல வாரியத் தலைவராக இருந்தார். 2010 முதல் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருவதுடன், திமுக தென் மண்டல அமைப்பு செயலராக இருந்த மு.க.அழகிரி ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கே.பி.ராமலிங்கம் எம்பி, நாமக்கல் ஒன்றிய திமுக செயலர் கணேசன் உள்பட 33 பேரை திமுக இடைநீக்கம் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com