ஆம்பூரில் இரு வேறு பிரிவைச் சேர்ந்த காதல் ஜோடி தலைமறைவான சம்பவத்தில் இருவரையும் காவல்துறையினர் நேற்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, நான் மேஜர் என்பதால் காதலனுடனேயே செல்வேன் என்று இளவரசி நீதிபதி முன்பு உறுதியாகக் கூறினார்.
ஆம்பூர் அருகே இரு சமுதாயத்தைச் சேர்ந்த காதல் ஜோடி தலைமறைவானதால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணுடைய தந்தையின் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தன்னுடைய தந்தையின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகன் ஆம்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
ஆம்பூர் அருகே சின்னவெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பன்னீர்செல்வம் (50). இவரது மகள் இளவரசி (20). இவர் வாணியம்பாடியில் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் டிராக்டர் டிரைவர் விக்னேஷ் (22) என்பவருடன் காதல் ஏற்பட்டு கடந்த ஜூன் 20-ம் தேதி பெற்றோருக்கு தெரியாமல் காதலனுடன் வீட்டைவிட்டுச் சென்றுள்ளார். மாலை 4 மணி வரை வீட்டுக்கு வராததால் பல இடங்களில் தேடியுள்ளனர். கிடைக்காததால் உமர்ஆபாத் போலீஸில் புகார் செய்தனர். பிறகு விக்னேஷுடன் அவர் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களுடைய நண்பர்களிடம் போய் கேட்டபோது வீட்டில் உள்ள இளவரசியின் சகோதரியையும் கடத்திச் சென்றுவிடுவோம் என மிரட்டினராம்.
இதில் மனமுடைந்த பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது உறவினர்கள் ஆம்பூர் டிஎஸ்பி கணேசனையும், ஆம்பூருக்கு வருகை தந்திருந்த மாவட்ட வருவாய் அலுவலர் கை.பலராமனையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இறந்த பன்னீர்செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு புதன்கிழமை காலை 10 மணிக்கு ஒப்படைக்க அவரது உறவினர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை போலீஸார் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை. பெண்ணின் காதலன் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்யாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறந்த பன்னீர்செல்வத்தின் குடும்பத்துக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம், முன்னாள் எம்எல்ஏக்கள் இளவழகன், டி.கே.ராஜா ஆகியோர் போலீஸாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீஸாருக்கும், பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. உமர்ஆபாத் போலீஸார் உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காததே சாவுக்கு காரணமென அவர்கள் தெரிவித்தனர்.
பிரச்னை தீவிரமடைவதை அறிந்த மாவட்ட எஸ்பி விஜயகுமார் ஆம்பூர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். ஆனால் காதலன் உள்பட மூவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். போலீஸார் காதலனைத் தவிர மற்ற இருவரை கைது செய்கிறோம் எனக் கூறினர். ஆனால் இறந்தவரின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தீர்வு எட்டப்படாததால் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியேறிச் சென்றனர்.
காதல் ஜோடி இளவரசி - விக்னேஷ் ஆகிய இருவரையும் வேலூரிலிருந்து போலீஸார் தகுந்த பாதுகாப்புடன் ஆம்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தராஜ் முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர். தான் மேஜர் என்பதால் தன்னுடைய விருப்பத்தின் பேரில் விக்னேஷுடன் செல்வதாக நீதிபதியிடம் இளவரசி கூறினார். அதன்பேரில் இருவரையும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார். தந்தையின் உடலைக் கூட இளவரசி பார்க்கவில்லை. காதல் ஜோடியை போலீஸார் எங்கு அழைத்துச் சென்றனர் என்பதுகூட தெரிவிக்கப்படவில்லை.