மனைப்பட்டா கோரி கோட்டாட்சியரிடம் திருநங்கைகள் மனு அளித்தனர்.
திருநங்கைகள் வேல்விழி, மோகனா ஆகியோர் தலைமையில் கடலூர் மார்க்கெட் காலனி, முதுநகர், சுத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் கடலூர் கோட்டாட்சியர் மோ.ஷர்மிளாவிடம் மனைப்பட்டா கேட்டு கோரிக்கை மனு புதன்கிழமை அளித்தனர்.
இதுகுறித்து திருநங்கைகள் கூறியது, எங்களுக்கு குடியிருப்பதற்கு சொந்தமாக இடம் இல்லை. எனவே கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியின்போது மனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம். அப்போது கடலூர் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க அறிவுரை வழங்கினார். அதன் பேரில் மனு கொடுத்து இருக்கிறோம்.
ஏற்கனவே கடந்த 2005-ம் ஆண்டு திருமாணிக்குழி கிராமத்தில் 43 திருநங்கைகளுக்கு மனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல எங்களுக்கும் மனை வழங்க வேண்டும். அது மட்டுமல்ல ஏற்கனவே மனை வழங்கப்பட்டுள்ள, தற்போது மனை கேட்டு மனு கொடுத்துள்ள திருநங்கைகளுக்கும் அரசு இலவச வீடு கட்டித்தர வேண்டும் என்றனர்.
பின்னர் இதுகுறித்து கோட்டாட்சியர் ஷர்மிளா கூறியது, மனைபட்டா கேட்டு 17 திருநங்கைகள் மனு கொடுத்துள்ளார்கள். ஏற்கனவே திருமாணிக்குழியில் 43 பேருக்கு மனை கொடுத்த இடத்தின் அருகில் உள்ள காலி மனையில் 17 பேருக்கும் மனை கொடுப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.