விருதுநகர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வில் 15176 பேர் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவர்களுக்காக விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில்
Published on

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வை 15,176 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவர்களுக்காக விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இத்தேர்வில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண், பெண் பட்டதாரிகள் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக வந்து மையத்தில் குவிந்தனர். இந்த மாவட்டத்திலிருந்து மொத்தம் 20936 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு எழுதுவதற்கு  விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 15176 பேர் பங்கேற்று இத்தேர்வு எழுதினார்கள். இதில், 5760 பேர் வரையில் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

இவர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு சென்று வரும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், தேர்வு மையங்களில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதில் விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தேர்வு மையத்தில்  அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, வட்டாட்சியர் சிவஜோதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

இத்தேர்வு குறித்து வெள்ளூரைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் கூறுகையில், தமிழ் வினாக்கள் அனைத்தும் இலக்கன குறிப்புகள் மற்றும் பொருத்துக ஆகியவைகள் பாட பத்திகைகளின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தது. கணக்கு மற்றும் பொது அறிவுக் கேள்விகள் எதிர்பாரத வகையில் இருந்ததாகவும் மீனாட்சி சுந்தரம்  குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com