
பழனியில் மூட்டை சித்தரின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 72 மணி நேரத்துக்கு பின்னர் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
பழனி அருகே கணக்கன்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து என்ற பழனி சுவாமிகள். எப்போதும் அழுக்கு மூட்டைகளுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்ததால் இவர் மூட்டைசித்தர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.
மூட்டை சித்தர் பெயரில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அறக்கட்டளைகள் மூலம் தியான நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உடல்நிலை குன்றி செவ்வாய்க் கிழமை அவர் முக்தி அடைந்தார். இதையடுத்து கடந்த இரு நாட்களாக கணக்கன்பட்டியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் சுவாமியை தரிசனம் செய்ய குவிந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். அரசியல், சினிமா, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர்.
இந்நிலையில் சுவாமியை நல்லடக்கம் செய்வது, அவர் தங்கியிருந்த மோகன் என்பவர் தோட்டத்திலா, அல்லது சுவாமியால் வாங்கப்பட்ட சற்குரு நகர் இடத்திலா என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. சுவாமி முன் திருவுளச் சீட்டு போடப் பட்டத்தில் சற்குருநகர் என வந்ததால் ஒருபிரிவினர் வியாழக்கிழமை மறியல் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். இதனால் மேற்படி இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
லேசான தடியடியும் நடத்தப்பட்டது. பின்னர் சில உறவினர்கள், பக்தர்கள் ஒத்துழைப்புடன் சுவாமியின் உடல் மோகன் தோட்டத்திலேயே மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுவாமி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் சுவாமிக்கு பதிவு செய்து தருவதாக தெரிவிக்கப்பட்டதாலேயே இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஆயக்குடி ஆய்வாளர் வீரகாந்தி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.