பெங்களூரிலிருந்து கேரளத்துக்கு லாரியில் கொண்டு சென்ற ரூ.5 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் பறிமுதல்

பெங்களூரிலிருந்து கேரளத்துக்கு லாரியில் கொண்டு சென்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் நாமக்கல்லில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின்
Updated on
1 min read

பெங்களூரிலிருந்து கேரளத்துக்கு லாரியில் கொண்டு சென்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் நாமக்கல்லில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதித்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாவட்ட உணவுப்பாதுகாப்புப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

பெங்களூரிலிருந்து கேரளத்துக்கு செல்வதற்காக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பார்சல் நிறுவனத்துக்கு சொந்தமான கண்டெய்னர் லாரி ஒன்று சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் சென்று கொண்டிருந்தது. நாமக்கல் அருகே கீரம்பூர் சோதனைச் சாவடியில் தோட்டக்கலை உதவி அலுவலர் எம்.ராஜசேகரன் தலைமையிலான தேர்தல் நிலைக்குழு அந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டது. அப்போது லாரியில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் பண்டல்கள் பெருமளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக லாரியுடன் புகையிலை பொருட்கள் அடங்கிய பண்டல்களை வருவாய் கோட்டாட்சியர் காளிமுத்து வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கே.தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை காலை வரவழைக்கப்பட்டு சோதனையிட்டபோது, லாரியில் தலா 140 பாக்கெட்டுகள் கொண்ட 100 பண்டல்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், லாரியில் வந்த ஓட்டுநர்கள் பெங்களூரைச் சேர்ந்த ஆதில்(42), திருப்பூரைச் சேர்ந்த சரவணக்குமார்(20), மதுரையைச் சேர்ந்த தாவூத் ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில், லாரி பெங்களூரிலிருந்து ஒட்டன்சத்திரம் சென்று அங்கிருந்து கேரளத்துக்கு செல்ல உள்ளது. எனினும், இந்த பொருட்கள் எங்கிருந்து எடுத்து வரப்படுகிறது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதும் தெரியாது. ஒட்டன்சத்திரத்துக்கு சென்று குறிப்பிட்ட அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினால் பொருட்களை கொண்டு செல்ல வேண்டிய இடத்தை தெரிவிப்பர் என்றனர்.

மேலும், அவர்கள் கொண்டு வந்த பொருட்களான ரசீதை சோதனையிட்டதில் அவை போலியானது என்பதும் உறுதியானது. இதையடுத்து, லாரியுடன் அனைத்து புகையிலை பொருட்கள் பண்டல்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த புகையிலை பொருட்களின் மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பி அதில் நிóக்கோடின் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

பிடிபட்ட ஓட்டுநர் சரவணக்குமார், சூலூரிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருவதாகவும், பகுதிநேர வேலையாக பார்சல் அலுவலகத்தில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தார். தவிர, உடன் வந்த தாவூத் வழியில் இறங்கிக் கொள்வதாகக் கூறி பெங்களூரிலிருந்து லாரியில் வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com