கலைஞரை காப்போம், கட்சியை மீட்போம்.: மு.க.அழகிரி

தலைவர் கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் யார், யாரோ திமுகவை சீரழித்து வருகிறார்கள். அதனால், அதைப்பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமுடியுமா. கலைஞரை காப்போம்
கலைஞரை காப்போம், கட்சியை மீட்போம்.: மு.க.அழகிரி
Updated on
2 min read

தலைவர் கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் யார், யாரோ திமுகவை சீரழித்து வருகிறார்கள். அதனால், அதைப்பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமுடியுமா. கலைஞரை காப்போம், கட்சியை மீட்போம் என மக்களவை தொகுதி உறுப்பினர் மு.க.அழகரி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் திமுக நிர்வாகி தமிழ்செல்வக்குமார்  குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மு.க.அழகிரி ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து அழகிரியின் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மு.க.அழகரி ஆதரவாளர்களிடையே பேசுகையில், தலைவர் கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் யார், யாரோ திமுகவை சீரழித்து வருகிறார்கள். அதனால், அதைப்பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமுடியுமா. கலைஞரை காப்போம், கட்சியை மீட்போம்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சியில் தீவிரமாக பாடுபட்டவர்களின் விவரங்களை கேட்டு தொகுதி செல்வாக்கு அடிப்படையிலேயே கொடுக்கப்பட வேண்டும். விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக்கு சம்பந்தமில்லாத வியாபாரிகளுக்கு, பணம் பெற்றுக் கொண்டு வேட்பாளராக போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், திருநெல்வேலியில் யாரோ பெயர் வாயில் நுழையாத தேவதாசனாம், திருசெந்தூர் திருக்கோயிலின் அறங்காவலரின் உறவினராம், பண முதலையாம். அதற்கு முன்னே மாவட்ட நிர்வாகி முதலையின் வாயில் விழுந்துட்ட என்பதை மறந்துடாது. அதேபோல், தலைவர் ஏப்.13-ம் தேதி மதுரை வந்து என்னை பார்க்கிறார். அதற்காக கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்து விடுவார்களா, செஞ்சாலும் செய்வாங்க.

தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளர் டாக்டர்.கிருஷ்ணசாமி, திமுகவில்  அழகிரியின் பிரச்னையால் எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதை அவர் உள்கட்சி பிரச்னை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். இப்படி சொன்னதால் உனக்குதான் பாதிப்பு. நானும் உனது சமுதாயத்தில் திருமணம் செய்திருக்கிறேன். எனக்கும் நிறைய சொந்தக்காரர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் 3 இடம் வருவதே பெரிது. இத்தேர்தலில் உனக்கு சரியான பாடமும் புகட்டுவேன்.

விருதுநகர் மாவட்டத்தில் இத்தேர்தலுக்கு பின் நிர்வாகிகளாக யார் இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கு முன்பு நான் நண்பர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதற்காக அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு எம்.எல்.ஏ, எம்.பி சீட்டு கொடுக்கமுடியுமா. தலைவரின் அனுமதியில்லாமல் எல்லாமே நடைபெறுகிறது. 1962ல் தஞ்சையில் தலைவர் போட்டியிடும் போது நடுராத்திரியில் எழுந்து திடீரென பூத்களுக்கு சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்துவார்.

இந்த நிலையில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் ஆதரவு கேட்கிறார்கள். அதேபோல், விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வைகோவும் ஆதரவு கேட்டார். மக்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து எனது ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்திதான் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார். அதையடுத்து தென்காசி கேபி மருத்துவமனையின் நிர்வாகி சங்கரின் தலைமையில் 150 பேர் அழகிரி முன்னிலையில் ஆதரவாளர்களாக  இணைந்தனர். முன்னதாக கிருஷ்ணன்கோவில் தேவர் பேரவையினர் வரவேற்பளித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மாநில இலக்கிய அணிச் செயலாளர் அமுதன் வீட்டிற்கு சென்றார்.  

இக்கூட்டத்தில் மாநில இலக்கிய அணிச்செயலாளர் அமுதன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எம்.போஸ், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தியாகராஜன், விருதுநகர் ஒன்றியச் செயலாளர் சின்னராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜலால், ராஜபாளையம் முன்னாள் நகர செயலாளர் வெங்கடேசன், துணைமேயர் மன்னன், மிசாபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com