விருதுநகர் அருகே மதிமுக தொண்டர்களை தரக்குறைவாக பேசிய போலீஸாரைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அக்கட்சியினர் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால், விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் வெயிலின் வெக்கையால் அவதி அடைந்தனர்.
விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் பெரியவள்ளிக்குளம் சோதனைச் சாவடியில் வட்டாட்சியர் தேவராஜ் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பறக்கும் படை அதிகாரிகள் அந்த வழியாக சென்று வருகிற வாகனங்களில் ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் அருப்புக்கோட்டை சென்று கொண்டிருந்தார்களாம். பெரியவள்ளிக்குளத்தில் மதிமுகவின் தொண்டர்கள் சென்ற வாகனத்தை வழிமறித்து பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் போலீஸார் ஆகியோர் சோதனையிட்டனர். அப்போது, யாரது எனக் கேட்டு மதிமுக தொண்டர்களை பார்த்து எங்க செல்கிறீர்கள் என கேட்டாராம். அதற்கு வைகோவுடன் செல்வதாக தொண்டர்கள் தெரிவித்ததற்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தரக்குறைவாக பேசினாராம்.
பின்னால் வந்த வாகனத்தில் வந்த மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தொண்டர்களிடம் இது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். உடனே வாகனத்தில் இருந்து இறங்கி பெரியவள்ளிக்குளம் காமராஜர் மணிமண்டபம் முன்பு தரக்குறைவாக பேசிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வைகோ, தொண்டர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் தரக்குறைவாக பேசுகிறார். இப்பகுதியில் போலீஸார் குறைந்தபட்ச மரியாதைக்கூட கொடுப்பதில்லை. இதேபோல் அநாகரிகமாக பேசுகிறவர்களை நான் இதுவரையில் பார்த்ததில்லை. இவர் அதிமுக அல்லது திமுகவிற்கு சாதகமாக செயல்படுகிறார். அதனால் இவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதையடுத்து, சம்பவ இடத்திற்கு அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் உதயகுமார் உள்ளிட்டோர் அதிகாரிகள் விரைந்து வந்து வைகோவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.
இச்சம்பவத்தால் விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் 10.45 முதல் 11.45 மணி வரையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பேருந்துகளில் பயணம் மேற்கொண்ட பயணிகள் கடும் வெய்யிலின் வெக்கையால் அவதிப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.