செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளை இரவில் மர்ம நபர்கள் எட்டிப்பார்த்த சம்பவம்: போலீஸார் தீவிர விசாரணை

விருதுநகர் செவிலியர் பயிற்சி பள்ளியில் மாணவிகளின் குளியலறைகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் எட்டிப்பார்த்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
Updated on
1 min read

விருதுநகர் செவிலியர் பயிற்சி பள்ளியில் மாணவிகளின் குளியலறைகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் எட்டிப்பார்த்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பின்புறம் செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இம்மாணவிகள் பயிற்சி பெறுவதற்கும், தங்குவதற்கும் இரண்டு வளாகத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிற சூழ்நிலை இருக்கிறது. அதேபோல், குளியலறை மற்றும் சுகாதார வளாகமும் குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் மாணவிகள் இரவு 12 மணியில் இருந்து குளித்து தயராக வேண்டிய சூழ்நிலையிருக்கிறது.

அப்போதுதான் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.30 மணிக்கு செவிலியர் பயிற்சி பள்ளியின் பின்புறம் சுற்றுச்சுவர் மீது ஏறி முதல் வளாகத்தில் மர்ம நபர்கள் ஏறியுள்ளனர். அங்கு மாணவிகள் குளிப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் போது பின்புறம் குடியிருப்புகளில் உள்ளவர்கள் திரண்டு வந்து சத்தம் போட்டுள்ளனர். மர்ம நபர்கள் வேகமாக இறங்கி தலைமறைவாகியுள்ளனர். இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு விரைந்து வந்த போலீஸார் மாணவிகளிடமும், செவிலியர் பயிற்சி பள்ளியின் கண்காணிப்பாளர் பிரகலாதன் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதையடுத்து, குடியிருப்பு பகுதிகளில் போலீஸார் சென்று மாணவிகள் குளியலறையை எட்டிப் பார்த்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்தனர்.

இது தொடர்பாக திங்கள்கிழமை காலையில் மாவட்ட தலைமை மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் அன்புவேல் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளியின் கண்காணிப்பாளர் பிரகலாதன், அலுவலர் நிர்மலா உள்ளிட்ட மருத்துவ துறை அலுவலர்கள் செவிலியர் பயிற்சி பள்ளியை ஆய்வு செய்தனர். அப்போது, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், ஜன்னல் கதவுகள் உடைந்தும் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்தது. அதேபோல், மழைக்காலங்களில் அறைக்குள் தண்ணீர் ஒழுகுவதாகவும் அதிகாரிகளிடம் மாணவிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாவட்ட தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவர் அன்புவேல் கூறியதாவது: இரவு மர்ம நபர் நுழைந்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. செவிலியர் பயிற்சி பள்ளிக்கு இரவு நேர பாதுகாவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் போலீஸாரும் பாதுகாப்புக்கு நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இடிந்துள்ள சுற்றுச்சுவரை புதுப்பித்து மர்ம நபர்கள் புகாமல் தடுக்கும் வகையில் கண்ணாடி சிதறல்கள் பதிப்பதற்கும்  பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக உறைவிட மருத்துவர் அன்புவேல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com