விருதுநகர் பகுதியில் பெய்த மழையால் சாலையில் தேங்கிய கழிவு நீர்

விருதுநகர் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதேபோல் திங்கள்கிழமை காலை முதல் பிற்பகல் வரையில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் வெப்பமாகவும்
விருதுநகர் பகுதியில் பெய்த மழையால் சாலையில் தேங்கிய கழிவு நீர்
Updated on
1 min read

விருதுநகர் பகுதியில் பிற்பகலில் பெய்த மழையால் குண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலையேற்பட்டது.

விருதுநகர் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதேபோல் திங்கள்கிழமை காலை முதல் பிற்பகல் வரையில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் வெப்பமாகவும் இருந்தது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட முடியாத நிலையிருந்தது. இந்நிலையில் பிற்பகலில் திடீரென கருமேகம் சூழ்ந்து சுமார் 1 மணிநேரம் பரவலாக மழை பெய்தது. அதையடுத்து, 3 மணி வரையில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

இதேபோல், விருதுநகர் அருகே எரிச்சநத்தம், செங்குன்றாபுரம், ஆமத்தூர், வெள்ளூர், குமாரபுரம், குமிழங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் மழை பெய்தது. ஏற்கனவே இப்பகுதியில் கிணற்றுப்பாசனத்திலும், மானாவாரியிலும் சூரியகாந்தி பயிரிட்டுள்ளனர். இப்பயிரும் போதிய மழையில்லாமல் வாடி வதங்கிய நிலையில் இருந்தது. தற்போது, கடந்த 3 நாள்களாக அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் பயிர் பசுமையாக காணப்படுகிறது.

மழை நீரால் சூழப்பட்ட பேருந்து நிலையம்: இந்த மழையால் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து பழைய பேருந்து நிலையத்திற்குள் புகுந்து குளம் போல் தேங்கியது. அதேபோல், பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் உள்ள சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனால், குழந்தைகளுடன் வந்த பெண்கள் மற்றும் பயணிகள் ஆகியோர் பஸ் ஏறிச் செல்ல முடியாத நிலையிருந்தது. இப்பகுதிகளில் இருந்து வெளியேறும் பல்வேறு கழிவுகளுடன், நீர் கலந்து வருவதால் துர்நாற்றமும் வீசியது.

இதேபோல், விருதுநகர் நகர் பகுதியில் உள்ள 4 வழிச்சாலையில் போதிய மழை நீர் வடிகால் வசதி இல்லாத நிலையிருக்கிறது. இதனால், பைபாஸ் சிவகாசி  சாலையிலும், வி.வி.வி.பெண்கள் கல்லூரி, ஆட்சியர் அலுவலகம் அருகே தண்ணீர் தேங்கியது. இதில், விருதுநகர் அரசு போக்குவரத்துக்கழகம் அலுவலகம் எதிரேயுள்ள சிவஞானபுரம் ஊராட்சியைச் சேர்ந்த லட்சுமி காலணி, பெத்தனாட்சி நகர் தெருக்களில் மழை நீர் புகுந்து சேரும், சகதியுமாக இருக்கிறது. பெரிய மழை நேரங்களில் குடியிருப்புக்களில் மழை நீரோடு, விஷப்பூச்சிகளும் புகுந்து விடுகிற நிலைமை இருக்கிறது. இதுபோன்ற காரணங்களை தடுக்கும் வகையில் 4 வழிச்சாலையில் குறிப்பிட்ட இடங்களில் விரைவில் மழை நீர் வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com