

விருதுநகர் பகுதியில் பெய்த மழையை அடுத்து பெரும்பாலன தார்ச்சாலைகள் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மழை நீர் தேங்கி போக்குவரத்திற்கு லாயக்கற்றவையாக மாறி வருகிறது.
விருதுநகர் மாவட்ட பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் நகராட்சி பகுதியில் பழைய பேருந்து நிலையத்தை சுற்றிலும் உள்ள சாலை, சிவகாமியாபுரம் சாலை, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள கச்சேரி சாலை, 4 வழிச்சாலை பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள விருதுநகர்-சிவகாசி சாலை, விருதுநகர்-அழாகபுரி சாலை, விருதுநகர் டி.டி.கே சாலை, மழையால் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. சமீபத்தில் போடப்பட்ட சாலைகள் என்றாலும், ஒரு மழைக்கு தாங்காத நிலையில் சேதமடைந்து உள்ளது.
இச்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், அரசு பேருந்துகளும் சென்று வருகிறது. இவ்வழி தடங்களில் பெரும்பாலனவை களிமண் தரையாக இருப்பதால் நெகிழ்வு தன்மையால் பள்ளம் ஏற்படுகிறது. அதோடு, ஓரப்பகுதியிலும் மணல் கொட்டி சமப்படுத்தாமல் இருப்பதால் மழை நீர் வடிவதால் அரிப்புத் தன்மை ஏற்படுகிறது. அதிலும், குறிப்பிட்ட இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகியுள்ளது. இதில், 4 வழிச்சாலை பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சிவகாசி சாலையில் போதிய வடிகால் வசதி செய்யப்படவில்லை. இந்த பெரிய அளவிலான பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை இருக்கிறது. இவ்வழியாக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் பாதசாரிகள் மீது கழிவு நீரை இரைத்துச் செல்கின்றனர்.
வெளியூர்களில் இருந்து வருகிற வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு சாலையின் தன்மை தெரியாத நிலையிருப்பதால், வேகமாக வந்து பழுதாகி நின்று விடுகிறது. அந்த இடத்தில் சேரும் சகதியமாக இருப்பதால் வாகனத்தை வெளியேற்றுவதற்கு சிரமப்பட வேண்டியிருப்பதாக வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஒருவர் கூறியதாவது: பெரும்பாலன சாலைப்பகுதிகளில் களிமண் தரையாக இருக்கிறது. அதனால் மழை பெய்தவுடன் தார்ச்சாலை சேதமடைகிறது. அதேபோல், மழையால் ஈரமாக இருப்பதால் ஜல்லி கற்கள் பெயர்ந்து சிறு, சிறு பள்ளங்கள் ஏற்படுகிறது. இம் மழை நின்றவுடன் உடனே சரி செய்யப்பட இருப்பதாக உதவி பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.