பொதுமக்களுக்கு இடையூராக இருந்து வரும் அரசு டாஸ்மாக் கடையை அகற்ற கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

விருதுநகர் அருகே பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு இடையூராக இருந்து வரும் அரசு டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம்
Published on

விருதுநகர் அருகே பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு இடையூராக இருந்து வரும் அரசு டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர்.

இது குறித்து விருதுநகர் அருகே உள்ள கோட்டையூர் கிராம மக்கள் ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் அருகே உள்ளது கோட்டையூர் கிராமம். இக்கிராமத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டூர் குருசாமி திருக்கோயிலும் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபாடு செய்வதற்காக பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அதையடுத்து இக்கிராமத்தின் அருகிலேயே தனியார் மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பஸ் நிறுத்தம் அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் மதுக்குடிப்பதற்காக வருகின்றனர். பின்னர் மதுக்குடித்து விட்டு திருக்கோயில் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கண்டபடி தகாத வார்த்தைகள் பேசுகின்றனர். இதையடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோரை கேலியும் கிண்டல் செய்தும் பிரச்னை செய்கின்றனர். இதுபோன்ற செய்வதால் ஜாதி மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது.

இதேபோல், கடந்த வாரம் பெண்களை கேலி கிண்டல் செய்தவர்களை தட்டிக் கேட்டது தொடர்பாக வன்முறை ஏற்பட்டு கல்வீச்சு தாக்குதல் சம்பவமும் நடந்துள்ளது. இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் எங்கள் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் பல்வேறு சாதியினர் கூட்டாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குடிகாரர்களால்  தேவையில்லாத பிரச்னை ஏற்பட்டு, கிராமத்தின் அமைதி கெடவும் வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே இங்குள்ள டாஸ்மாக் கடையை மாற்றுவதற்காக ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் இந்த மதுக்கடையை விரைவில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியரிடம்  அளித்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com