குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்: ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்

விருதுநகர் மாவட்டத்தில் மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.
 
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அனைத்து ஊராட்சிகள்,  பேருராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் மற்றும் மின் விநியோகம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசுகையில், அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநில பேரிடர் நிவாண நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளையும் விரைந்து முடித்து  பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

    இதில், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி மற்றும் இடைப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல், அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய நகராட்சிகள், காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகள் மற்றும் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமும், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு இருக்கன்குடி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேல்நிலைத் தொட்டி உள்ளிட்ட குடிநீர் திட்டத்திற்கான பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

     இதேபோல் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாய்க்காலில் தேங்கும் மழை நீர் ஆகியவை மூலம் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

    இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலர் பிரபாகர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பீபிஜான், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மற்றும் குடிநீர் திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com