விருதுநகர் பகுதியில் நடைபெற இருந்த 4 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் மேலத்தெரு, பெரியபேராளியில் 2 சிறுமிகளுக்கும் மற்றும் பொம்மக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிறுமிகளுக்கு திருமணத்திற்கு  ஏற்பாடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்களிடம் இருந்து ஆட்சியர் டி.என்
Updated on
1 min read

விருதுநகர் பகுதியில் நடைபெற இருந்த 4 சிறுமிகளின் திருமணத்தை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆகியோர் தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

விருதுநகர் மேலத்தெரு, பெரியபேராளியில் 2 சிறுமிகளுக்கும் மற்றும் பொம்மக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிறுமிகளுக்கு திருமணத்திற்கு  ஏற்பாடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்களிடம் இருந்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பாண்டியம்மாளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் பாரதமாதா மற்றும் சைல்டு லைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லதா உள்ளிட்டோர் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது ஜூன் மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்த மருதமுத்துவின்  மகள் அங்காளபரமேஸ்வரி(17), உறவினரான சிவகாசியைச் சேர்ந்த டிரைவர் சரவணன்(24)என்பவருக்கும் வருகிற 8.6.2014ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதேபோல், பெரிபேராளியைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பவரின் மகள் ஸ்ரீராணி(17), விருதுநகர் அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்த உறவினரான சி.ஆர்.பி.எப் போலீஸாக பணிபுரிந்து வரும் ராஜேஸ்கண்ணனுக்கும் வருகிற 9.6.2014லும், பெரியபேராளியைச் சேர்ந்த அழகர்சாமியின் மகள் பிரபாவதி(16)-க்கும், உறவினரான கோவையில் டிரைவராக பணிபுரிந்து வரும் பாண்டியராஜன்(24) என்பவருக்கும் வருகிற 8.6.2014லும், திருச்சுழி அருகே பொம்மக்கோட்டையைச் சேர்ந்த நாகராஜனின் மகள் பவதாரணி(15) என்பவருக்கும் மதுரை புளியம்பட்டியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கும் வருகிற 8.6.2014லும் திருமணம் நடைபெற இருக்கிற விவரம்   தெரியவந்தது.

இந்த 4 சிறுமிகளும் 10-வது வகுப்பு முடித்து வீட்டில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடனே அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பெற்றோர்களிடம் அரசு விதிமுறைப்படி சிறுமிகளுக்கு திருமணம் செய்யக் கூடாது என்றும், குறிப்பிட்ட வயது அடைந்த பின் திருமணம் செய்து வைப்பதாக கூறி உறுதிமொழி கடிதத்தையும் எழுதி வாங்கினர். பின்னர் 4 மாணவிகளையும் பாண்டியன் நகர் குழந்தைகள் பாது காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்குள்ள ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் மாணவிகளுக்கு அறிவுரை கூறும் படியும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com