தலைமை காவலரை தாக்கி வாக்கி டாக்கி, செல்போன் பறிப்பு: இளைஞர்கள் மூவர் சிக்கினர்

மொடக்குறிச்சி காவல் நிலைய தலைமை காவலரை தாக்கி வாக்கி டாக்கி, செல்போன் ஆகியவற்றை பறித்த சம்பவம் தொடர்பாக மூவரை போலீஸார்
Updated on
1 min read

மொடக்குறிச்சி காவல் நிலைய தலைமை காவலரை தாக்கி வாக்கி டாக்கி, செல்போன் ஆகியவற்றை பறித்த சம்பவம் தொடர்பாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.

 நாமக்கல் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் தனக்கோடி (50). ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இவர் பணியாற்றி வருகிறார்.

 இந்த காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொக்கராயன்பேட்டை பரிசல் துறை அருகே வியாழக்கிழமை மதியம் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது இவரது செல்போனை தொடர்புகொண்ட ஒருவர், அதே பகுதியில் உள்ள பாலம் அருகே சிலர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதாக தகவல் தெரிவித்தார்.

 சம்பவ இடத்துக்கு தனக்கோடி சென்றபோது, இளைஞர்கள் மூவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை சமாதானம் செய்ய தனக்கோடி முயன்றபோது, கீழே கிடந்த கல்லை எடுத்து தனக்கோடியை அந்த இளைஞர்கள் தாக்கினார்களாம்.

 பின்னர் அவரிடம் இருந்த வாக்கி டாக்கி, செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பிவிட்டார்களாம்.

 இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர், ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸார், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள காவல் நிலைய போலீஸாரை உஷார் படுத்தினர்.

 இந்நிலையில், ஈரோடு பழையபாளையம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வாகனங்களில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

 அவர்களிடம் வாக்கி டாக்கி, செல்போன் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சித்தோடு அருகே பேரோடு பகுதியை சேர்ந்த தங்கவேல், வேலன் என்பதும், மற்றொருவர் கருப்பண்ணன் என்பதும் தெரியவந்தது.

 இவர்களை மொடக்குறிச்சி போலீஸாரிடம், ஈரோடு தாலுகா போலீஸார் ஒப்படைத்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 இச்சம்பவம் தொடர்பாக மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com