விருதுநகர் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியது தொடர்பாக எம்.ரெட்டியபட்டி போலீஸார் ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில் இருந்து-எம்.ரெட்டியபட்டி வழியாக செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு சுத்தமடம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில் ஓட்டுநராக சிவயோகனும், நடத்துனராக சண்முகசுந்தரமும் இருந்தனர். இதில், எம்.ரெட்டியபட்டியில் இருந்து எஸ்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜ்(28), கீழபரளச்சியைச் சேர்ந்த விஜயகுமார்(25) ஆகியோர் பேருந்தில் பயணம் செய்தனர். இவர்கள் இருவரும ராணுவவீரர்களாக பணியாற்றி வருவதால் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், சாலை மோசமாக இருந்ததால் மெதுவாக பேருந்தை ஓட்டுநர் இயக்கியுள்ளார். அப்போது, விஜயகுமார் பேருந்தை வேகமாக இயக்கச் சொன்னாராம். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அதையடுத்து பயணிகள் சமதானம் செய்து வைத்தார்களாம். பின்னர் சுத்தமடத்திற்கு சென்று பேருந்தை நிறுத்திவிட்டு அங்குள்ள திருக்கோயில் வளாகத்தில் ஓட்டுநரும், நடத்துநரும் தூங்கினார்களாம்.
அங்கு இரவில் வந்த விஜயகுமார், பாண்டியராஜ் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து ஓட்டுநர் சிவயோகனை சரமாரியாக தாக்கினார்களாம். இது தொடர்பாக ஊமைக்காயம் அடைந்த சிவயோகன் தங்கள் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு புதன்கிழமை எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.