மதுரை நகரின் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழும் மாரியம்மன் கோயில் முன்புள்ள தெப்பக்குளம் பொறுப்பற்ற சில வியாபாரிகளால் குப்பைகளால் மாசுபட்டுவருவது சமூக ஆர்வலர்களையும், பக்தர்களையும் வேதனையடைய வைக்கிறது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம், விரகனூர் செல்லும் வழியில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் முன் அமைந்துள்ளது. தியாகராஜர் கல்லூரி, அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் என பெருமைமிகு அடையாளங்கள் தெப்பத்தைச் சுற்றியே அமைந்துள்ளன.
கடந்த கி.பி.1645-இல் திருமலை நாயக்கர் மன்னரால் அமைக்கப்பட்ட மாரியம்மன் தெப்பக்குளம் சுமார் 305 மீட்டர் நீளமும், 290 மீட்டர் அகலமும் உடையது. இதன் ஒவ்வொரு பக்கமும் 3 படிக்கட்டு வழிகள் உள்ளன. இதன் ஆழம் சுமார் 18 அடி.
தெப்பத்துக்தான நீர் வருவதற்கு மேற்கு திசையில் இரு வழிகள் உள்ளன. பழைய
கிருதுமால் நதியிலிருந்து நீர் வரவும், வைகை ஆற்றிலிருந்து சொட்டதட்டி கால்வாயிலிருந்து நீர் வரவும் வழிகள் உள்ளன. தெப்பத்தில் நீர் செல்லும் முன்பு 6 அடி ஆழத் தொட்டியில் நீர் நிரம்புகின்றன. அங்கு மணல் உள்ளிட்ட நீரின் கழிவுகள் தேங்கிவிடும். கழிவுகள் மேல் தேங்கும் நீர் மட்டுமே தெப்பத்தில் விழும் தொழில்நுட்பம் உள்ளது.
தற்போது தெப்பத்துக்கு வரும் நீர் வழிகள் கழிவுநீர் வாய்க்காலாகி விட்டன. இதனால், தெப்பத்தில் கழிவுநீர் தேங்குவது சகஜமாகி வருகிறது. இங்குதான் ஜனவரி மாதம் (தமிழில் தை) மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழா நடைபெறும்.
கடந்த 3 ஆண்டுகளாக தெப்பத்தில் நீரின்றி தெப்பத் திருவிழா நிலைத் தெப்பமாகவே நடைபெற்றது. தற்போது தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் வைகையில் அதிகளவு தண்ணீர் ஓடுகிறது. இந்தத் தண்ணீரை கோயில் தக்கார் கரு முத்து கண்ணன் மற்றும் கோயில் செயல் அலுவலர் என். நடராஜன் முயற்சியின் பேரில், மின் மோட்டார் பம்ப் மூலம் தெப்பத்தில் நிரப்பி வருகின்றனர் கோயில் நிர்வாகத்தினர்.
தெப்பத்தில் நீர் நிரம்பி வருவதால், தற்போது வழக்கமான கூட்டத்தைவிட அதிகமானோர் கூடி வருகின்றனர். இதனால் தள்ளுவண்டிகளில் பானிபூரி, பஜ்ஜி, வடை, சுண்டல் என பல வகை வியாபாரமும் களை கட்டியுள்ளது. வியாபாரம் செய்வோர், மீதமாகும் உணவுப் பொருள்களையும், பொட்டலம் மடிக்கும் தாள்கள் உள்ளிட்டவற்றையும் தெப்பத்துக்குள்ளேயே கொட்டிச் செல்கின்றனர். இதனால் தெப்பத்தில் குப்பைகள் அதிகம் சேர்ந்து, தெப்ப நீரை குப்பைகள் சேர்ந்த துர்நாற்றம் வீசுவதாக்கி விடுகிறது.
நிலத்தடி நீரின் ஆதாரமாகவும், கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்காகவும், உலகப் புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழாவுக்காகவும் நிரப்பப்படுகிற தண்ணீரை அசுத்தமாக்குவது எந்தவகையில் நியாயம்? என்பதே பொதுமக்களின் கேள்வியாகும்.
ஆகவே, தெப்பத்தைச் சுற்றி வியாபாரம் செய்யும் பெயரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.